ரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய்-21 மிக் ரக போர் விமானங்களை வாங்கும் இந்திய விமானப்படை
ரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக் ரக போர் விமானங்களையும் இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
சுகோய் சூ-30 எம்.கே.ஐ. போர் விமானங்களை இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த வகை போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பிரான்ஸ் நாட்டின் மிராஜ் போர் விமானங்களுக்கு பதிலாக, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு சுகோய் போர் விமானங்கள் வாங்கப்பட்டன. பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட சுகோய் போர் விமானங்கள், ஒரே நேரத்தில், எதிரிகளின் இருவேறு இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவையாகும்..
அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானத்திற்கு நிகரானது, பன்முக தாக்குதல் திறன் கொண்ட, ரஷ்யாவின் மிக்-29 போர் விமானங்கள் ஆகும்.
இந்த இரண்டு வகை விமானங்களும் இந்திய விமானப்படையில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மேலும், அதிக எண்ணிக்கையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகையில், ரஷ்யாவிடமிருந்து மேலும் 18 சுகோய் போர் விமானங்களையும், 21 மிக்-29 ரக போர் விமானங்களையும், இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய ரஷ்ய ராணுவம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகான துணை இயக்குநர் விளாடிமிர் ட்ரோச்சோவ், இந்தியாவுக்கு சுகோய் போர் விமானங்களை தயாரித்து அளிப்பதில், அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்திய விமானப்படையிடம் இருந்து, மேம்படுத்தப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும், 18 புதிய சுகோய் விமானங்களுக்கான ஒப்பந்தம் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுதவிர 21 அதிநவீன மிக்-29 ரக போர் விமானங்களை விநியோகிப்பதற்கான ஆர்டர் கிடைத்திருப்பதாகவும் விளாடிமிர் ட்ரோச்சோவ் தெரிவித்திருக்கிறார்.
மேலும், 450 டீ-90 ரக பீரங்கிகளை நவீனப்படுத்துவதற்கான ஒப்பந்தமும், இந்தியாவிடமிருந்து கிடைத்திருப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார். இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஆர்.மாதவன், கடந்த பிப்ரவரி மாதம், பெங்களூருவில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது, சுகோய், மிக் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வது பற்றி, ரஷ்யாவுடன் பேசப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக, இந்தியா வங்க உள்ள 18 சுகோய் போர் விமானங்கள், 21 மிக்-29 ரக போர் விமானங்களுக்கான ஒப்பந்த மதிப்பு வெளியிடப்படவில்லை.
Related Tags :
Next Story