மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுப்பு: நாட்டின் அவசர நிலையைவிட தற்போதைய சூழல் மோசமானது தேவேகவுடா குற்றச்சாட்டு


மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுப்பு:  நாட்டின் அவசர நிலையைவிட தற்போதைய சூழல் மோசமானது தேவேகவுடா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 July 2019 3:00 AM IST (Updated: 11 July 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஓட்டலில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ‘நாட்டின் அவசர நிலையை விட தற்போதைய சூழல் மோசமானது’ என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

மும்பை ஓட்டலில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ‘நாட்டின் அவசர நிலையை விட தற்போதைய சூழல் மோசமானது’ என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா குற்றம்சாட்டினார்.

அவசர நிலையைவிட மோசமானது 

குதிரைபேரத்தில் ஈடுபட்டதாக கூறி பா.ஜனதா கட்சி தலைவர்களை கண்டித்து நேற்று பெங்களூருவில் உள்ள ராஜ்பவனை(கவர்னர் மாளிகை) முற்றுகையிட காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பேசும்போது கூறியதாவது:–

தற்போதைய சூழல் நாட்டின் அவசர நிலையைவிட மோசமானது. மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க மந்திரி டி.கே.சிவக்குமார் சென்றார். அவர் ஓட்டலில் அறை முன்பதிவு செய்து இருந்த நிலையிலும் கூட டி.கே.சிவக்குமாரை போலீசார் ஓட்டலுக்குள் அனுமதிக்கவில்லை. என்னுடைய 60 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற நிலையை பார்த்தது இல்லை. நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் பாகுபாடுகளை மறந்து ஜனநாயகத்தை காப்பாற்ற போராட வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

பணம், அதிகாரத்துக்காக சென்றனர் 

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதல்–மந்திரி சித்தராமையா பேசும்போது கூறியதாவது:–

மும்பையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், தங்களை காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தில் நடமாட விடாதது போன்றும், தொகுதி மக்களை சந்திக்க விடாமல் தடுத்தது போன்றும் கூறி வருகிறார்கள். மும்பைக்கு சென்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பணம் மற்றும் அதிகாரத்துக்காக சென்றுள்ளனர். அவர்கள் தங்களைத் தானே விற்பனை செய்து கொண்டனர். பா.ஜனதா வைக்கும் அனைத்து பொறிகளிலும் சிக்க வேண்டாம். உடனடியாக வந்து ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுங்கள். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் வரும் தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story