தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சமரச குழு 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு + "||" + The case of Ayodhya land The report must be filed Supreme Court order

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சமரச குழு 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: சமரச குழு 18-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், வருகிற 18-ந் தேதிக்குள் விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சமரச குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.


இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, சர்ச்சைக்கு உரிய அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வுகாணும் யோசனையை முன்வைத்த நீதிபதிகள் அதற்காக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தனர். இந்த குழு, 8 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், சமரச குழுவுக்கு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிவரை காலஅவகாசம் வழங்கி மே 10-ந் தேதி உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான கோபால் சிங் விஷாரத் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சமரச குழுவால் இதுவரை இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், எனவே கோர்ட்டே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மனுதாரர் கோபால் சிங் விஷாரத் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.பராசரன் வாதாடுகையில் கூறியதாவது:-

இந்த நாட்டின் மிகவும் உயரிய கோர்ட்டு இது. இந்த விவகாரத்தை முடித்து வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் விரும்பினால் அதற்கான அதிகாரம் உங்களுக்கு உள்ளது. இந்த வழக்கில் முதல் மனு கடந்த 1950-ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டது. முதல் மனுதாரர் இறந்து விட்டதால் அவருடைய மகன் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதால் இந்த வழக்கு குறித்து இந்த கோர்ட்டே முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிர்மோகி அகாரா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சுசீல் குமார் ஜெயின் வாதாடுகையில், “இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரு தரப்பினரையும் சமரச குழு அழைத்து சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இரு தரப்பினரும் ஒன்றிணைந்து சமரசத்துக்கு வரவேண்டும். எந்த ஒரு சந்திப்பும் நடைபெறாமல் இந்த விஷயத்தில் எப்படி சமரசம் ஏற்படுத்த முடியும்? இந்த வழக்கு தொடர்புடைய அனைவரும் வழிபாட்டாளர்கள். இடத்துக்கு சொந்தம் கோருபவர்கள் அல்ல” என்று கூறினார்.

அவரை தொடர்ந்து சன்னி வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான் வாதாடுகையில், “தற்போது கோர்ட்டில் ஆஜராகாத சமரச குழு குறித்து விமர்சிப்பது நியாயமாக இருக்காது. எங்களுக்கு தெரிந்த வரை இந்த சமரச குழு, தொடர்புடைய இரு தரப்பினரை சந்தித்தும், தனியாகவும் கூட்டங்கள் நடத்தி உள்ளது. ஒரு தரப்பினர் திருப்தி ஆகவில்லை என்பதற்காக சமரச குழுவையே கலைக்க வேண்டும் என்று பேசுவதற்கு முகாந்திரம் கிடையாது” என்றார்.

ராம் லல்லா தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார் வாதாடுகையில், இந்த வழக்கில் காலம் கடந்து கொண்டே இருப்பதால், விரைவில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

சமரச குழுவின் தலைவர் (ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா) சமரச முயற்சிகள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் தற்போது சமரச பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய நிலவர அறிக்கையை வருகிற 18-ந் தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த அறிக்கையை கோர்ட்டு ஆய்வு செய்து, சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் தொடர்பான விஷயத்தில் சமரச குழுவால் தீர்வு காணமுடியாத நிலை இருப்பதாக கருதினால், வருகிற 25-ந் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை தினசரி விசாரிக்கும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...