செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்பு
வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் நியூயார்க் மற்றும் ஹூஸ்டன் செல்ல உள்ளார். ஐ.நா பொதுசபைக் கூட்டம் வரும் செப்டம்பரில் 20 ந்தேதி முதல் 23ந்தேதிவரை நடைபெறுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், செப்டம்பர் 23- ம் தேதி நடைபெறும் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, செப்டம்பர் 22ஆம் தேதி ஹூஸ்டன் அல்லது சிகாகோ நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து இருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள ஹூஸ்டன் நகரம், உலகின் எரிசக்தி தலைநகர் என்று வர்ணிக்கப்படுகிறது. எரிசக்தித்துறைக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், ஹூஸ்டனில் கூட்டம் நடைபெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி 2014ஆம் ஆண்டில் பிரதமரான பின்னர் இரண்டு முறை அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டில் நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்தில், 2016ஆம் ஆண்டில் சிலிக்கான் வேலியில் அவர் உரையாற்றியுள்ளார்.
Related Tags :
Next Story