ஓய்வுக்கு பிறகு அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் டோனி


ஓய்வுக்கு பிறகு அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் டோனி
x
தினத்தந்தி 13 July 2019 2:59 PM IST (Updated: 13 July 2019 2:59 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுக்கு பின் டோனி பாரதீய ஜனதாவில் சேரலாம் என பாரதீய ஜனதா தலைவர் சஞ்சை பஸ்வான் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் எம்.எஸ்.டோனி.  ஓய்வுக்கு பிறகு டோனி அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. அவர் பாரதீய ஜனதாவில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை.  ஜூலை 7ம் தேதியுடன் டோனிக்கு 38 வயது ஆகிறது. 

ஏற்கனவே பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கிழக்கு டில்லியில் இருந்து எம்.பி.யாகி விட்டார். அதே பாணியில் டோனியையும் கொண்டு வரும் வேலைகளை பாஜக  செய்ய துவங்கி விட்டது. டில்லி பா.ஜ. எம்.பி.யான மனோஜ் திவாரி, டோனிக்கு நெருக்கமானவர். 

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட, டோனியை ஒரு முறை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது இருந்தே, பாஜக வில் டோனி சேருவார் என்ற பேச்சு அடிபடத் துவங்கியது. ஏற்கனவே இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மூத்த நிர்வாகிகளிடம், உலக கோப்பை முடியும் வரை பொறுத்திருக்குமாறு டோனி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜக, டெல்லி தலைமை பாஜகவுக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் கடந்த 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து பாஜகவை சேர்ந்தவர்களே இங்கு அதிகமுறை முதல்வர்களாக இருந்துள்ளனர். சில தருணங்களில் பாஜகவின் ஆதரவோடு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் நம்முடைய வசமே உள்ளது.

விரைவில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதை நாம் தொடர வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக மாநிலத்தில் நாம் வெற்றிபெற்று வரும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான மனநிலையை பொதுமக்கள் வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், நாடு முழுவதும் காங்கிரஸ் பெற்ற தோல்வியினால் ஏற்பட்ட பொதுமக்களின் அனுதாபம் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலித்தால் நம்முடைய வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகும். 

எனவே, இவை அனைத்தையும் மீறி நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் அசைக்க முடியாத ஆதரவு உள்ள டோனியை நம்முடைய கட்சியின் சார்பாக களம் இறக்கினாலோ அல்லது முதல்வர் வேட்பாளராக முன் மொழிந்தாலோதான் எளிதாக நாம் வெற்றி பெறலாம். அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கினால், யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக வெற்றியை மாநிலத்தில் பெறலாம் என கூறப்பட்டு உள்ளது.

 இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சை பஸ்வான் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது:-

ஓய்வுக்கு பின் மகேந்திர சிங் டோனி அரசியலில் சேர வாய்ப்பு உள்ளது. இது குறித்து அவரிடம் நீண்ட நாட்களாக பேச்சு நடத்தி வருகிறோம். இருப்பினும் அவர் ஓய்வு பெற்ற பின்னரே இது குறித்து முடிவு எடுக்கப்படும். டோனி எனது நண்பர்,  டோனி உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் எனவும், கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து  விவாதங்கள் நடந்து வருகின்றன என்றும் கூறினார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் சஞ்சை பஸ்வான் மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சராக இருந்தவர் ஆவார்.

Next Story