அசாமில் கனமழையால் வெள்ளம்: 15 லட்சம் மக்கள் பாதிப்பு


அசாமில் கனமழையால் வெள்ளம்: 15 லட்சம் மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 13 July 2019 9:15 PM IST (Updated: 13 July 2019 9:15 PM IST)
t-max-icont-min-icon

அசாமில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. 15 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கவுகாத்தி, 

அசாமில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்குள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை இன்னும் தீவிரமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், அங்குள்ள நிலமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மாநில அரசிடம் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 68 நிவாரண முகாம்களில் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். 25 மாவட்டங்களில் உள்ள 15 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. பார்பேடா மாவட்டம் அதிக சேதங்களை சந்தித்துள்ளதாகவும், அந்த மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அசாம் மாநில முதல் மந்திரி சர்பானந்த சோனோவால் எடுத்துரைத்தார். அசாமில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா 70 சதவீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விலங்குகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

Next Story