சென்னை, நாகையில் என்.ஐ.ஏ. சோதனை தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாசவேலைக்கு திட்டமிட்ட 2 பேர் கைது
சென்னை, நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
253 பேர் பலி
உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 253 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து இலங்கை இன்னும் முழுவதுமாக மீண்டு வரவில்லை. சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஆசிம் என்ற பயங்கரவாதியுடன், கேரளாவில் உள்ள ஒரு அமைப்பைச் சேர்ந்த 4 இளைஞர்கள் ‘வாட்ஸ்-அப்’ மூலம் தொடர்பில் இருந்தது என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
தாக்குதல் நடத்த திட்டம்
இலங்கையை போன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்துவதற்கு வியூகங்கள் வகுக்கப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்கள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் இறங்கினார்கள்.
பயங்கரவாத அமைப்பு
கேரளாவில் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடந்த மே மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று தமிழ்நாட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை, ராமநாதபுரம், சேலம், மதுரை, நெல்லை உள்பட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்த கோவை மற்றும் தென்காசியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் அதிரடி சோதனை
இந்த நிலையில் சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள ‘வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் தலைவர் சையத் புகாரி, நிர்வாகிகள் உஸ்மான், இஸ்மாயில் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் தடை செய்யப்பட்ட ‘அன்சாருல்லா’ என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்வதற்கான நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்த அதிர்ச்சி தகவல் மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.
இதையடுத்து அந்த அமைப்பின் அலுவலகத்திலும் மற்றும் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்துவது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.
அதன்படி என்.ஐ.ஏ. போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையில் 10 பேர் அடங்கிய அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் சென்னை மண்ணடியில் உள்ள ‘வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
முக்கிய ஆவணங்கள் சிக்கியது
அந்த அமைப்பின் தலைவர் சையத் முகமது புகாரியின் இல்லம் சென்னை புரசைவாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. அவருடைய இல்லத்திலும் சோதனை நடந்தது.
அதே நேரத்தில் நாகையில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு சாகுல் அமீது தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நாகை சிக்கல் மெயின் ரோட்டில் உள்ள அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லையில் உள்ள ஹாரிஸ் முகமது வீடும் அதிகாரிகள் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னை மற்றும் நாகையில் 4 இடங்களில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 4 மணி அளவில் நிறைவடைந்தது.
இந்த சோதனையில் 9 செல்போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்- டாப்கள், 5 ஹார்ட் டிஸ்க்குகள், 6 பென் டிரைவ்கள், 2 டேபிளட் செல்போன்கள், 3 டி.வி. டிகள்., பருவ இதழ்கள், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான பேனர்கள், நோட்டீசுகள், புத்தகங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த சோதனையின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த சையத் முகமது புகாரி, நாகையைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகிய 3 பேர் மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 120 பி, 121 ஏ (நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல்), 122 (அரசுக்கு எதிராக போர் தொடுக்கும் வகையில் ஆட்களை திரட்டுதல்) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பிரிவு 17, 18, 18 பி, 38 ஆகியவற்றின் கீழும் மேற்கண்ட 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
நாகையில் பிடிபட்ட அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோரிடம் அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக அவர்களிடம் விசாரணை நீடித்தது.
சென்னையில் பிடிபட்ட சையது முகமது புகாரியிடம் சென்னை கிண்டியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடந்தது.
விசாரணையில் அவர்களிடம் பரபரப்பு வாக்குமூலம் பெறப்பட்டது.
2 பேர் கைது
அந்த வாக்குமூலத்தில் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட அவர்கள் சதித்திட்டம் தீட்டி, அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதற்காக அவர்கள் தடை செய்யப்பட்ட ‘அன்சாருல்லா’ என்ற அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்புக்கு ஆட்களை திரட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேலும் அதற்கான நிதி வசூலிலும் அவர்கள் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
தீவிர விசாரணைக்கு பிறகு நாகையில் பிடிபட்ட அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
நீதிபதி முன்பு ஆஜர்
துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகையில் இருந்து அவர்கள் வேன் மூலம் சென்னைக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால், என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் அவரது வீட்டில் 2 பேரையும் ஆஜர்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மாலை 3.45 மணி அளவில் எழும்பூரில் வசிக்கும் நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் நீதிபதி செந்தூர்பாண்டியன் விசாரணை நடத்தினார்.
புழல் சிறையில் அடைப்பு
விசாரணை முடிவில் இருவரையும் வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்திலேயே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் பிடிபட்ட சையது முகமது புகாரியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story