காங். தலைவர்களை சந்திக்க விருப்பம் இல்லை: மும்பை காவல்துறைக்கு கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம்
காங். தலைவர்களை சந்திக்க விருப்பம் இல்லை என்று மும்பை காவல்துறைக்கு கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மும்பை,
கர்நாடக அரசியலில் கடந்த 8 நாட்களாக பரபரப்பான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இதனால் முதல்- மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு ஆட்டம் கண்டு வருகிறது.
அதாவது கூட்டணி அரசு மீதான அதிருப்தியால் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 15 எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே உள்பட சிலர் வரலாம் என்று ஊகங்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்திக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று மும்பை காவல்துறைக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாங்கள் அச்சுறுத்தப்படலாம் எனவும் அக்கடிதத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவர்களது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தங்கள் முடிவில் மாற்றம் இல்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். தங்கள் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
கர்நாடகாவில் தற்போது ஆளும் அரசுக்கு அவையில் 116 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. இவர்களில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 78 மற்றும் ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்கள் 37 பேர் ஒரு பிஎஸ்பி எம்.எல்.ஏ.வும் அடங்குவர்.
இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பாஜகவுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் ஆளும் அரசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் பலம் 100 ஆக குறைந்து விடும்.
Related Tags :
Next Story