கலப்பு திருமணம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகளுக்கு அடி, உதை; மற்றொரு ஜோடி கடத்தலால் பரபரப்பு


கலப்பு திருமணம்:  பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகளுக்கு அடி, உதை; மற்றொரு ஜோடி கடத்தலால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 July 2019 3:41 PM IST (Updated: 15 July 2019 3:41 PM IST)
t-max-icont-min-icon

கலப்பு திருமணம் செய்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகள் மற்றும் மருமகனுக்கு அடி, உதை விழுந்ததுடன் மற்றொரு ஜோடி கடத்தப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.

அலகாபாத்,

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரமேஷ் மிஸ்ரா.  இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா.  உயர் வகுப்பு பிரிவை சேர்ந்த இவர் அஜிதேஷ் குமார் என்ற வேறு சாதி இளைஞரை கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

எனினும், இந்த திருமணத்தில் சாக்ஷியின் தந்தைக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது.  இதனால் அவரால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறி இந்த தம்பதி பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

நாங்கள் இருவரும் வயது வந்தவர்கள்.  விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம்.  எங்களது அமைதியான வாழ்க்கையில் போலீசாரோ அல்லது மிஸ்ராவோ இடையூறு செய்ய கூடாது என்று அவர்கள் மனுவில் தெரிவித்து உள்ளனர்.

இதன் மீது நடந்த விசாரணையில், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனுமதி அளித்து நீதிபதி சித்தார்த் வர்மா உத்தரவிட்டார்.  இதன்பின் அவர்கள் இரண்டு பேரும் வெளியே வந்தனர்.  அவர்களை நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே அங்கிருந்த சில வழக்கறிஞர்கள் தாக்கியுள்ளனர்.

அதேவேளையில், நீதிமன்ற வளாகத்தில் மற்றொரு ஜோடி கடத்தப்பட்டது.  இதனால் சாக்ஷி மற்றும் அஜிதேஷ் ஆகிய இருவரும் கடத்தப்பட்டனர் என அங்கிருந்தவர்கள் நினைத்து அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் பதேபூர் பகுதியில் வைத்து அந்த ஜோடி மீட்கப்பட்டு உள்ளனர்.  அந்த ஜோடியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அலகாபாத் காவல் கண்காணிப்பாளர் அதுல் சர்மா கூறியுள்ளார்.

Next Story