20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் கண்ட கர்நாடகம் ; நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா?


20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள்  கண்ட கர்நாடகம்  ;  நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு தப்புமா?
x
தினத்தந்தி 15 July 2019 5:56 PM IST (Updated: 15 July 2019 5:56 PM IST)
t-max-icont-min-icon

20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் கண்ட கர்நாடகம். நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு தப்பி பிழைக்குமா? என்பது வியாழக்கிழமை தெரியவரும்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சபாநாயகர் கே.ஆர். ரமேஷிடம் பாஜக தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

அத்துடன் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில்  வரும் 18-ந்தேதி  நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 11 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

எதுவாக இருந்தாலும்  தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை கர்நாடகாவுக்கு புதுசுதான். ஆச்சரியமாக இருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கர்நாடகாவில் 5 முறை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 2 முறை கூட்டணி உடைந்தது, 3 முறை கூட்டணி அரசு அமைந்தது, இரண்டு முறை குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது. நீங்கள் நம்பினால் நம்புங்கள்... 10 முதல்வர்கள் இந்த 20 ஆண்டுகளில் கர்நாடகாவை ஆண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களின் போது மக்கள் எப்போதும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இரண்டே முதல்வர்கள்தான் தங்களது முழு பதவிக் காலத்தை ஆண்டுள்ளனர். ஒன்று 1972ம் ஆண்டு முதல்வரான தேவராஜ் மற்றும் 2013ம் ஆண்டு முதல்வரான சித்தராமையா. ஆனால் இதே 20 ஆண்டுகளில் இவர்களுடன் 18 முதல்வர்கள் கர்நாடகாவை ஆண்டுள்ளனர். அவர்களில் எஸ்.எம். கிருஷ்ணா கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

கூட்டணி முறிவு, உள்கட்சி விவகாரம், ஊழல் குற்றச்சாட்டு போன்றவை கர்நாடகாவில் தொடர் ஆட்சி மாற்றத்துக்குக் காரணங்களாக அமைந்து விட்டன.

இதே மதசார்பற்ற ஜனதா தளம் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று முறை கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. இரண்டு முறை காங்கிரஸ் கட்சியுடனும், ஒரு முறை பாஜகவுடனும் கூட்டணி அமைத்தது. ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க முடிந்தது. இரண்டு முறையும் கூட்டணி முறிந்து ஆட்சி பறிபோனது.

இதில் 2004ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம்  - பாஜகவுடன் கூட்டணி அமைத்து 20 - 20 என்று ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தது. முதல் இரண்டரை காலத்துக்கு முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். 20 மாதங்கள் முடிந்தது, ஆனால், முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு விட்டுக் கொடுக்க குமாரசாமி மறுத்ததால், ஆட்சி கலைந்தது. 2008ம் ஆண்டு பேரவைத் தேர்தலுக்கு முன்பு கர்நாடகாவில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது.

இதுபோல பல காரணங்களால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கர்நாடகா 10 முதல்வர்களை சந்திக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

தற்போதும், இதேபோன்ற ஒரு துர்பாக்கிய நிலைக்குத்தான் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும் நிலையில், வரும் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர உள்ளார் முதல்வர் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது. குமாரசாமிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுமா, சாபமே நீடிக்குமா?

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணியில் 116 பேர் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மனம் மாறி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே குமாரசாமி அரசு தப்பிப் பிழைக்க முடியும்.

Next Story