சித்து மற்ற மந்திரிகளை போல் புது இலாகா பொறுப்பை ஏற்க வேண்டும்; அமரீந்தர் சிங்
சித்து மற்ற மந்திரிகளை போல் புது இலாகா பொறுப்பை ஏற்க வேண்டும் என முதல் மந்திரி அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
சண்டிகார்,
பஞ்சாப் மாநில மந்திரியாக பதவி வகித்து வந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. கடந்த மாதத்தில், உள்ளூர் அரசு துறையை சரியாக கையாள சித்துவுக்கு தெரியவில்லை. அதனால் மக்களவை தேர்தலில் நகர்ப்புறங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது என சிங் குற்றச்சாட்டாக கூறினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இதன்பின் கடந்த ஜூன் 6ந்தேதி மந்திரிசபையில் மாற்றம் ஏற்பட்டது. இதில் முக்கிய இலாகாக்கள் சித்துவிடம் இருந்து பறிக்கப்பட்டன. அவர் வகித்து வந்த உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலா மற்றும் கலாசார விவகார துறைகளுக்கான மந்திரி பதவிக்கு பதிலாக, மின் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலாகா ஒதுக்கப்பட்டது.
இதேபோன்று வேறு பல மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டன. இந்நிலையில், சித்து பதவி விலகல் கடித நகலை நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். அதில், கடந்த ஜூன் 10 என தேதியிடப்பட்ட எனது கடிதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எனது பதவி விலகல் கடிதம் முதல் மந்திரிக்கு அனுப்பப்பட்டு விட்டது. அவரது அலுவலக இல்லத்தில் அது சேர்ந்து விட்டது என தெரிவித்து உள்ளார்.
சித்து பொதுவெளியில் இந்த விவகாரத்தினை கொண்டு வந்தது பற்றி சிங் கூறும்பொழுது, இதனால் அரசாங்கத்திற்கு இடையூறு எதுவும் ஏற்படவில்லை. கட்சியில் சில ஒழுக்கங்கள் இருக்க வேண்டும். எங்களுடைய மந்திரிகள் திறம்பட செயலாற்றிய விதத்தினை கண்டு, குறிப்பிட்ட பணியில் திறமையாக செயல்படுவர் என நினைத்து அவர்களை வேறு இலாகாக்களுக்கு மாற்றியுள்ளேன்.
பஞ்சாப்பிற்கு மின் துறை முக்கியம் வாய்ந்த ஒன்று. அதனால் சித்துவுக்கு அதனை வழங்கினேன். ஆனால் அவர் அந்த துறையை விரும்பவில்லை. எனவே நான், ஒரு முடிவு எடுத்த பின்பு இது வேண்டாம். அதனை கொடுங்கள் என நீங்கள் கேட்க முடியாது என்று கூறினேன்.
இது, சில ராணுவ அதிகாரிகள் லடாக்கிற்கு போகமாட்டேன். மணிப்பூருக்கு என்னை அனுப்புங்கள் என கூறுவது போல் உள்ளது. நீங்கள் எப்படி இதனை கூற முடியும்? உங்களுக்கு என்ன கூறப்பட்டதோ அதனை நீங்கள் செய்ய வேண்டும் என சிங் உறுதிப்பட கூறியுள்ளார்.
எப்படி மற்ற 12 மந்திரிகள் தங்களது பணிக்கான பொறுப்பை (புதிய இலாகாக்களுக்கான பொறுப்பு) ஏற்று கொண்டனர் என கேட்டுள்ள அவர், சித்துவுடன் மோதல் எதுவும் இல்லை. அவரிடமே இதனை கேளுங்கள் என்றும் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story