அத்வானி, ஜோஷி, கல்யாண்சிங் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க மேலும் 6 மாத அவகாசம் தேவை சுப்ரீம் கோர்ட்டில் தனி நீதிபதி கோரிக்கை


அத்வானி, ஜோஷி, கல்யாண்சிங் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க மேலும் 6 மாத அவகாசம் தேவை சுப்ரீம் கோர்ட்டில் தனி நீதிபதி கோரிக்கை
x
தினத்தந்தி 16 July 2019 4:00 AM IST (Updated: 16 July 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

அத்வானி, ஜோஷி, கல்யாண்சிங் உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிடம் தனி நீதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இதற்கு சதி செய்ததாக பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, (தற்போதைய கவர்னர்) கல்யாண்சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா, விஷ்ணு ஹரி டால்மியா மற்றும் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை விடுவித்து கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் வழக்கு நடத்த கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

ரேபரேலி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கு விசாரணையை லக்னோவில் உள்ள அயோத்தி விவகாரங்களுக்கான தனி கோர்ட்டுக்கு மாற்ற உத்தரவிட்டது. தினசரி விசாரணை நடத்தி, 2 ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்குமாறும் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்டோரில் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் ஆகியோர் காலமாகிவிட்டனர்.

ஓய்வு பெறும் நீதிபதி

லக்னோ தனிக்கோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, வருகிற செப்டம்பர் 30-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இத்தகவலை கடந்த மே மாதம் அவர் கடிதம் மூலம் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியப்படுத்தினார்.

இந்நிலையில், அவர் சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் அணுகி உள்ளார். வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இவ்விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, வழக்கில் தீர்ப்பு அளிக்கும்வரை தனி நீதிபதியின் பணிக்காலத்தை நீட்டிப்பதற்கான வழிமுறை குறித்து 19-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரபிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story