கர்நாடகத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
கர்நாடகத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
கர்நாடகத்தில் ராஜினாமா செய்துள்ள காங்கிரசைச் சேர்ந்த 7 பேர், ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 12-ந்தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது 16-ந்தேதி (இன்று) வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அதன்பிறகு கே.சுதாகர், என்.நாகராஜ், முனிரத்தினா, ரோஷன் பெய்க், ஆனந்த் சிங் ஆகிய மேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தங்கள் ராஜினாமா கடிதங்களையும் ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி, இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்து விசாரிக்குமாறு 5 எம்.எல்.ஏ.க்கள் மனுக்கள் தாக்கல் செய்திருப்பதாகவும் அந்த மனுக்களையும் செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணைக்கு வரும் 10 எம்.எல்.ஏ.க்கள் வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
எனவே 10 எம்.எல்.ஏ.க்களின் மனுக்களுடன் இந்த 5 எம்.எல்.ஏ.க்களின் மனுக்களும் சேர்த்து இன்று விசாரிக்கப்படும்.
Related Tags :
Next Story