தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் இல்லை சுப்ரீம் கோர்ட்டில் கால அவகாசம் கேட்கிறது, மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க அக்டோபர் இறுதி வாரம் வரை மேலும் கால அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
புதுடெல்லி,
வக்கீல் ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தாமல் உள்ளதால் அது மாநிலத்தில் பல வளர்ச்சி பணிகளுக்கு தடையாக உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை பணி நிறைவு பெற்று, தொகுதி மறுவரையறை தொடர்பான அறிவிப்பாணை அரசு இதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எப்போது நடக்கும்?
இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
தேர்தல் ஆணையம் மனு
இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அனைத்து வகையிலும் கடைப்பிடிக்கவே தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை தேசிய தகவல் மையத்துக்கு வழங்கும் பணி மற்றும் மாவட்ட நிர்வாக பணியாளர்கள் இதுபோன்ற பணிகளில் தீவிரமாக இருந்ததாலும், சில மாவட்டங்களில் வறட்சி நிவாரண பணிகள் போன்ற தவிர்க்க இயலாத சில காரணங்களாலும் மேலும் 60 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அவகாசம்
இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. எனவே, மேலும் 60 நாட்கள் கூடுதலாக வழங்குமாறு கோரப்படுகிறது.
வருகிற அக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையத்துக்கு மேலும் அவகாசம் வழங்குமாறு கோரப்படுகிறது.
இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story