தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரயான்-2’ கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் நள்ளிரவில் திடீர் பரபரப்பு
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், சந்திரயான்-2 விண்ணில் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திரயான்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.
தொடர்ந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக மற்றொரு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ரூ.1,000 கோடி மதிப்பில் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டுவரப்பட்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டு வந்தது.
கண்காணிப்பு
இந்தநிலையில் 20 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு ‘சந்திரயான்-2’ விண்கலத்தை சுமந்து கொண்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணை நோக்கி வெற்றிகரமாக சீறிப்பாய தயார் நிலையில் இருந்தது.
அப்போது, 3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது. 640 டன் எடையும், 4 மீட்டர் உயரமும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் செயல்பாட்டை கண்காணிப்பு கேமரா மூலம் விஞ்ஞானிகள் கண்காணித்து கொண்டு இருந்தனர். மறுபுறம் கவுண்ட்டவுன் நேரம் குறைந்து கொண்டே வருவதை பத்திரிகையாளர்கள் மாடத்தில் இருந்தபடி பத்திரிகையாளர்கள் கவனித்து கொண்டு இருந்தனர்.
பரபரப்பு
இந்தநிலையில் 19 மணிநேர கவுண்ட்டவுனை வெற்றிகரமாக முடித்த நிலையில் நள்ளிரவு 1.55 மணிக்கு திடீரென்று கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. உடனடியாக பத்திரிகையாளர்கள் மாடத்தில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அனைவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டதுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளை தொடர்புகொண்டு ராக்கெட்டுக்கு என்ன ஆனது? ஏன் கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டு உள்ளது? எப்போது கவுண்ட்டவுன் தொடங்கும், ராக்கெட் விண்ணில் ஏவப்படுமா? என்று பல கேள்விகளை கேட்டனர்.
அனைத்துக்கும் விஞ்ஞானிகள் கைகளை விரித்தபடி ஒன்றுமே தெரியாது என்று கூறியபடி சோகத்துடன் சென்றனர். வழக்கமான ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை விட நேற்று அதிகமான வாகனங்களும், பத்திரிகையாளர்களும் வந்திருந்ததால் பரபரப்பு அதிகமானது.
ஏவுதல் நிறுத்தம்
ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிடுவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் கவர்னர்கள் பன்வாரிலால் புரோகித் (தமிழ்நாடு), நரசிம்மன் (ஆந்திரா) ஆகியோர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தனர். ராக்கெட் ஏவுவது நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்த உடன் அவர்கள் அனைவரும் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றனர்.
தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந் தது. இதில் சந்திரயான்-2 திட்ட இயக்குனர் வனிதா முத்தையா உள்ளிட்ட விஞ்ஞானிகள் பலர் கலந்துகொண்டனர். அதில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு குறித்து விவாதம் நடந்தது. தொடர்ந்து ராக்கெட் ஏவுவது குறித்தும் ஆலோசனை நடந்தது.
நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்ட பத்திரிகையாளர் மாடத்தில், இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை ஒன்றை ஒலிபெருக்கி மூலம் இஸ்ரோ செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி பி.ஆர்.குருபிரசாத் வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:-
சந்திரயான்-2 விண்கலம் ஏவுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பாக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் ஒரு தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான்-2 ஏவுவது இன்று (நேற்று) நிறுத்தப்பட்டது. மறுபடியும் விண்ணில் ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹீலியம் குழாயில் கசிவு
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘ஜி.எஸ்.எல்.வி.’ மார்க்-3 ரகத்தில் 14-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெறுகிறது. நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜெனிக்’ என்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள உந்துவிசை ஒரு எரிபொருளான ஹீலியம் எனப்படும் ஒரு வேதிப்பொருள், ஆக்சைசர் நைட்ரஜன் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட கருவியை உந்து சக்தி மூலம் இயக்கும்.
ஆனால் உந்து சக்தி கொண்ட ஹீலியம் வேதிப்பொருள் அடங்கிய குழாயில் கசிவு ஏற்பட்டது, கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டதுடன், ராக்கெட் ஏவுவதும் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதுடன், ராக்கெட்டின் திட்டமதிப்பான ரூ,1,000 கோடியும் பாதுகாக்கப்பட்டு உள்ளது.
இதனால் விஞ்ஞானிகள் அனைவரும் மனம் சோர்ந்துவிடவில்லை. மீண்டும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
‘சந்திரயான்-2 விண்கலத்தை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் சந்திரயான்-2 ஏவப்படுமா? என்பது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது’ என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.
சந்திரயான்-2 ஏவுவது கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதால், பத்திரிகையாளர்களும், இணையதளத்தில் பதிவு செய்து வந்திருந்த 5 ஆயிரம் பார்வையாளர்களும் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.
Related Tags :
Next Story