வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: அசாமில் 43 லட்சம் மக்கள் பாதிப்பு


வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்:  அசாமில் 43 லட்சம் மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 16 July 2019 1:15 AM GMT (Updated: 16 July 2019 1:15 AM GMT)

கனமழையால் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

கவுகாத்தி,

இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் மற்றும் அசாம், நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

அசாம் மாநிலத்திலும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 28 மாவட்டங்களில் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவீதம் வெள்ள நீரில் மிதக்கின்றன.  கடந்த 2 நாட்களில் 17 வன விலங்குகள் உயிரிழந்துவிட்டன.   

மிசோரம், மேகாலயா மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.


Next Story