கர்நாடகம் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்
கர்நாடக சபாநாயகரை முடிவு எடுக்க நான் நிர்பந்திக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார்.
புதுடெல்லி,
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் 16 பேர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த ராஜினாமா குறித்து கர்நாடக மாநில சபாநாயகர் முடிவு அறிவிக்கவில்லை. அதையொட்டி அதிருப்தி உறுப்பினர்கள் 10 பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அதிருப்தி உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என கர்நாடக மாநில சபாநாயகரை கேட்டுக் கொண்டார். சபாநாயகர் தம்மால் உடனடியாக முடிவு எடுக்க முடியாது எனவும் கால அவகாசம் தேவை எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று இது குறித்த விசாரணையில், அதிருப்தி உறுப்பினர்கள் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் ரோத்தகி, ஒருவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய தனிப்பட்ட காரணங்கள் ஆயிரம் இருக்கும். அதிருப்தி உறுப்பினர்களின் ராஜினாமாக்கள் பற்றி முடிவு எடுக்காது சபாநாயகர் காலம் தாழ்த்தி வருவதாகவும், உடனடியாக முடிவு எடுக்க சபாநாயகரை நீதிபதி வற்புறுத்த வேண்டும் எனவும் தனது வாதத்தில் தெரிவித்தார்.
இதற்கு ரஞ்சன் கோகாய், 'என்னால் சபாநாயகரை நிர்பந்திக்க முடியாது. நான் இதை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். சபாநாயகருக்கு உத்தரவிட்டு முடிவு எடுக்கக்கோரி நிர்பந்திக்க என்னால் முடியாது. சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் சொல்ல முடியாது என பதில் அளித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story