மும்பையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
மும்பையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையின் டாங்கிரி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். முதல்கட்டமாக இருவரது சடலம் மீட்கப்பட்டது. 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மிகவும் குறுகலான சந்து பகுதியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் கடந்த வாரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. குறுகிய சந்து காரணமாக மீட்பு பணியில் தொய்வு காணப்படுகிறது. இடிபாடுகளை அகற்ற மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள் சிக்கிய கட்டிடத்தில் 7-8 குடும்பங்கள் இருந்துள்ளன. இடிபாடுகளுக்குள் 40க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில் மேலும் சிலர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது எனவும் பராமரிப்பின்றி காணப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
மும்பையில் பழமையான கட்டிடங்கள் மழைகாலங்களில் இடிந்து விழுந்து விபத்து நேரிடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்தாலும், நடவடிக்கையின்றி பொதுமக்கள் ஆபத்தான கட்டிடங்களிலே தொடர்ந்து வசிக்கிறார்கள். கட்டிட விபத்து தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், “கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. ஆபத்தான கட்டிடம் என ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்வதற்கு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏதேனும் குறைபாடு நேரிட்டிருந்தால் விசாரணையை மேற்கொள்வோம்,” எனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story