மும்பை: டோங்கிரியில் குடியிருப்பு கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு


மும்பை: டோங்கிரியில் குடியிருப்பு கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 July 2019 2:05 AM GMT (Updated: 17 July 2019 3:56 AM GMT)

மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் 55 பேர் உயிரோடு புதைந்தனர்.

மும்பை,

மும்பையில் உள்ள டோங்கிரி, மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி ஆகும்.இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவை மிகவும் நெருக்கமாக குடிசை பகுதி போல் அமைந்து உள்ளன. இங்குள்ள தண்டல் தெருவில் ‘கேசர்பாக்' என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது.

ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை 11.40 மணியளவில் திடீரென அந்த கட்டிடம் ஆட்டம் கண்டது. அடுத்த சில நொடிகளில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. 

சீட்டு கட்டு போல் சரிந்த கட்டிடம் கண்இமைக்கும் நேரத்தில் தரைமட்டமானது. கட்டிடத்தில் வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். சுமார் 55 பேர் உயிருடன் புதைந்தனர். அப்போது, பயங்கர சத்தம் கேட்டது. பூகம்பம் ஏற்பட்டது போல் அந்த இடமே குலுங்கியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவர்கள் கட்டிடம் இடிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வாகனங்களில் விரைந்து வந்தனர். கேசர்பாக் கட்டிடம் இருந்த பகுதி வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலான பகுதி என்பதால் இடிபாடுகளை அகற்றும் பணிக்கு பொக்லைன் எந்திரங்களை வரவழைக்க இயலவில்லை. இதனால் இடிபாடுகளை அகற்றுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் வேன்களும், மீட்பு குழுவினர் வந்த வாகனங்களும் 50 மீட்டர் தூரத்துக்கு வெளியிலேயே தான் நிறுத்தப்பட்டு இருந்தன. மீட்பு படையினரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் மண்வெட்டிகள் கொண்டும், கைகளாலேயும் இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருப்பவர்களை மீட்க போராடினார்கள். அவர்களுக்கு உதவியாக ஏராளமான பொதுமக்கள் குறுகலான அந்த தெருவில் மனித சங்கிலி அமைத்து கட்டிட கழிவுகளை ஒருவரிடம் ஒருவர் கொடுத்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சவாலான இந்த மீட்பு பணியின் போது கட்டிட இடிபாடுகளில் இருந்து 11 பேர் பிணமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தை மற்றும் 6 ஆண்கள், 4 பெண்கள் ஆவர்.

மேலும் 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் ஈடுபட்டனர்.  இந்த நிலையில்,  கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.


Next Story