கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்
கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டணி அரசுக்கு எதிராக 15 எம்.எல்.ஏ.க்கள் திரும்பி உள்ளனர். அந்த வகையில், காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா மீது சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார் முடிவு எடுக்காததால், சுப்ரீம் கோர்ட்டை நாடினர்.
அவர்களது முறையீட்டை கடந்த 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது 16-ந்தேதி (நேற்று) வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.
அதன்பிறகு கே.சுதாகர், என்.நாகராஜ், முனிரத்தினா, ரோஷன் பெய்க், ஆனந்த் சிங் ஆகிய மேலும் 5 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், தங்கள் ராஜினாமா கடிதங்களையும் ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று நடைபெற்றது.
அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி கூறும்போது, “தற்போது வழக்கு தொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் விலகினால் அரசு கவிழ்ந்து விடும். இவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு முகாந்திரம் இல்லை. அப்படி தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருந்தாலும், இந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதில் எந்த தடையும் கிடையாது. தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கை என்பது இந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு போடும் முட்டுக்கட்டையாகும்” என்றார்.
மேலும், “அரசியல் சட்டப்பிரிவு 190 அடிப்படையில் சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட ராஜினாமா மீது அவர் விரைந்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ராஜினாமா செய்தவர்கள் கோர்ட்டுக்கு வந்திருக்கிறார்கள். ராஜினாமா செய்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். பிறரால் தூண்டப்பட்டது நிரூபிக்கப்பட்டால் ஒழிய சபாநாயகர் அதனை நிலுவையில் வைக்க முடியாது. தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க இவர்கள் ராஜினாமா செய்வதாக சபாநாயகர் கூறுகிறார். இது மற்றவர்கள் தூண்டுதலில் நடைபெற்றதாக அர்த்தமாகாது. எனவே, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி இந்த ராஜினாமா கடிதங்களின் மீது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க இந்த கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றும் கூறினார்.
சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி, “எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தவறான தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பதற்கு முன்பே தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கை தொடங்கி உள்ளது. தகுதி நீக்க நடவடிக்கை என்பது கொறடாவின் பரிந்துரையில் எடுக்கும் நடவடிக்கையாகும். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கடந்த 11-ந்தேதிதான் சபாநாயகர் முன்பு ஆஜராகி இருக்கிறார்கள். 15 பேரில் 11 பேர் 11-ந்தேதிதான் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்து இருக்கிறார்கள். இன்னும் 4 பேர் அப்படி செய்யவில்லை. சபாநாயகர் தகுதி நீக்கம் குறித்து கண்டிப்பாக முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றங்களின் பல தீர்ப்புகள் உள்ளன. இந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதால் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க ராஜினாமா குறுக்கு வழி ஆக முடியாது. இது தகுதிநீக்கம் குறித்த பிரச்சினைதான்” என கூறினார்.
அப்போது நீதிபதிகள், “ராஜினாமா கடிதங்கள் குறித்து சபாநாயகர் ஏன் முடிவு எடுக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அபிஷேக் சிங்வி, “ராஜினாமா கடிதம் மற்றும் தகுதி நீக்கம் ஆகிய இரண்டு வழிகளும் ஆலோசிக்கப்படுகின்றன” என்று கூறினார்.
அப்போது ராஜினாமா குறித்து முடிவு எடுங்கள் என்று கூறிய நீதிபதிகள், “கடந்த ஆண்டு சபாநாயகருக்கு 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிட்டு இருக்கிறோம். அப்போது அது உங்களுக்கு சாதகமாக இருந்ததால் அதற்கு நீங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை” என்றார்கள்.
இதற்கு அபிஷேக் சிங்வி, “அது வேறு சூழ்நிலை. அது ஆட்சி அமைப்பது குறித்த பிரச்சினை. ஆனால் இப்போது கோர்ட்டை சபாநாயகரின் பணியை மேற்கொள்ள அவர்கள் கோருகிறார்கள். அப்போது ஆட்சி அமைப்பது குறித்து சபாநாயகருக்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை” என்றார்.
இதற்கு நீதிபதிகள், “அப்போது சுப்ரீம் கோர்ட்டு ஏன் குறுக்கிட்டது என்றால் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆட்சியமைக்க கவர்னர் 15 நாட்கள் அவகாசம் அளித்தார். அது சரியல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு நினைத்தது” என்றனர்.
மேலும், அபிஷேக் சிங்வி தொடர்ந்து, “இவர்கள் 11-ந்தேதி ராஜினாமா கடிதம் தருவதற்கு முன்பே தகுதி நீக்க நடவடிக்கை தொடங்கி விட்டது. எனவே இவர்கள் மனு எந்த வகையிலும் முகாந்திரம் அற்றது” என்றும் வாதிட்டார்.
முதல்-மந்திரி குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜீவ் தவான், “மனுதாரர்களான எம்.எல்.ஏ.க்களின் நோக்கம் தெளிவாகி உள்ளது. அவர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர்கள் உடனடியாக மந்திரியாகி விடுவோம் என்று கூறுகிறார்கள். இந்த நோக்கத்தை கருத்தில் கொண்டுதான் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும். இவர்கள் சபாநாயகரை சந்திப்பதை தவிர்த்து விட்டு மும்பைக்கு பறந்து சென்றார்கள்” என்றார்.
இதை எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வக்கீல் முகுல் ரோத்தகி குறுக்கிட்டு மறுத்தார். “அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகள் ஆக விரும்பியதாக நான் எங்கும் கூறவில்லை” என்றார்.
அதற்கு ராஜீவ் தவான் பதில் அளிக்கையில், “அவர்கள் அமைச்சர்கள் ஆக முடியுமா என்று தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு நீங்கள் முடியும் என்று கூறினீர்கள். அது இருக்கட்டும். இந்த வழக்கில் உத்தரவு எதுவும் பிறப்பிக்க நீதிபதிகளுக்கு அதிகாரம் கிடையாது. சென்ற வாரம் பிறப்பித்த இரு இடைக்கால உத்தரவும் கோர்ட்டின் அதிகார வரம்பை மீறி வழங்கப்பட்டதாகும். சுப்ரீம் கோர்ட்டு விதிமுறையின் அடிப்படையில் ஒருவரின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டால் மட்டுமே அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இது தொடர்பான முழுமையான விவாதம் நடைபெற வேண்டும்” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள், இந்த வழக்கு மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக தெரிவித்தனர். அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. வாக்கெடுப்பில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியாது. நாளை கர்நாடக சட்டசபையில் நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது, கொள்ளாதது எம்.எல்.ஏக்களின் விருப்பம். ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதையும் நிர்ணயிக்கவும் முடியாது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது என உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story