வெள்ளத்தில் மிதக்கும் அசாம்! 52 லட்சம் மக்கள் பாதிப்பு, 20 பேர் பலி


வெள்ளத்தில் மிதக்கும் அசாம்! 52 லட்சம் மக்கள் பாதிப்பு, 20 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2019 12:34 PM IST (Updated: 17 July 2019 12:34 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை, வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தீவிரம் அடைந்து உள்ளது.  வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அசாமில் பெய்து வரும் பேய் மழையால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

அசாம் மாநிலத்திலும் பிரம்மபுத்ரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.  28 மாவட்டங்களில் 52 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.  4,600 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் 11 நதிகளில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் 380-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புகழ்பெற்ற காசிரங்கா தேசிய வனவிலங்குகள் பூங்கா 90 சதவீதம் வெள்ள நீரில் மிதக்கின்றன.  தற்போது வரை அங்கு 30 விலங்குகள் உயிரிழந்துள்ளன. 

அசாமிற்கு நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.251.5 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.  ஜலசக்தி துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேக்வத், வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அசாம் சென்றுள்ளார். அசாம் மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனாவலிடம் நேற்று தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். 

Next Story