மும்பையில் தொடரும் கனமழை: ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை; ரெயில் சேவை பாதிப்பு
மும்பையில் தொடரும் கனமழையால் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் இந்த ஆண்டு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. சில நாட்களாக மிதமாக பெய்து வந்த மழை நேற்று மீண்டும் கொட்டி தீர்த்தது. குறிப்பாக நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது.
மும்பையின் பக்கத்து மாவட்டங்களான தானே, பால்கரில் மிக கனமழையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 4 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தனர்.
மும்பையில் மிலன் நகரில் சாந்தாகுரூஸ் பகுதியில் சுரங்கபாதைக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. ஹேமந்த் மஞ்ரேகர் சாலை, மோதிலால் நகர் அஞ்சல் அலுவலகம், சாய்நாத் சாலை, மதீனா மன்ஜில், சியோன் சாலை, வீர தேசாய், கஜு படா, தஹானுகார் வாடி ஆகிய சாலை பகுதிகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது.
மும்பையில் சியோன் மற்றும் வகோலா ஆகிய பகுதிகளில் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் நீரில் நீந்தியபடி சென்றன. தெளிவற்ற வானிலையால் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனங்கள் பயணித்தன.
கனமழை மற்றும் வெள்ளம் சூழ்ந்த நிலையில், சியோன் மற்றும் குர்லா இடையேயான அனைத்து 4 வழிகளிலும் இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே தெரிவித்து உள்ளது.
இதேபோன்று கல்யாண் மற்றும் தானே ரெயில் நிலையங்கள் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கின. இதனால் ரெயில் பயணிகள் விடுமுறை நாளில் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.
இதுபற்றி மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து காற்று வீசக்கூடும். மதியம் 4.5 மீட்டர் அளவுக்கு கடலில் அலைகள் உயரே எழும்பும். பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். கடல் இன்று சீற்றமுடன் காணப்படும். அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மித்தி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், இன்று காலை கிரந்தி நகர் பகுதியில் இருந்து 400 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் குர்லா பகுதியில் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் பொறுப்பு படையை சேர்ந்த 8 குழுக்கள் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மும்பையில் வசாய் விரார், பத்லாபூர், சஹாபூர், சஹாத் மற்றும் கல்யாண் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகம் ஆக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிகளில் நாளை காலை வரை கனமழை நீடிக்கும். மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மிக அதிக கனமழை பெய்யும். இதனால் அப்பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அப்பகுதிகளில் உள்ளூர் ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக இதுவரை நவி மும்பை, பால்கர் மற்றும் தானே ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர். அவர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. காவலர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story