ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் - பிரதமர் மோடி டுவீட்


ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் - பிரதமர் மோடி டுவீட்
x
தினத்தந்தி 6 Aug 2019 9:45 PM IST (Updated: 6 Aug 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் காத்திருப்பதாக பிரதமர் மோடி டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்  அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி வகை செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டன.  மக்களவையில் இன்று இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

விவாதத்தில் உறுப்பினர்கள் பேசிய பின்னர், உள்துறை மந்திரி அமித்ஷா பதிலளித்து பேசினார். இதையடுத்து, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் மின்னணு வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மிர் மக்களுக்கு புதிய விடியல் காத்திருப்பதாக பிரதமர் மோடி டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர், லடாக் மக்களுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது.  சுயநல குழுக்கள் மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமல் உணர்ச்சிப்பூர்வமாக அச்சுறுத்தி வந்தனர். ஜம்மு காஷ்மீர் சகோதர, சகோதரிகளின் துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். 

ஒன்றாக இணைந்து, ஒன்றாக உயர்ந்து, ஒன்றிணைந்து 130 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றுவோம். லடாக் மக்களுக்கு வாழ்த்துக்கள், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Next Story