கடந்த 17 ஆண்டுகளில் இதுவே மிகச்சிறந்த கூட்டத் தொடர் - வெங்கையா நாயுடு பெருமிதம்


கடந்த 17 ஆண்டுகளில் இதுவே மிகச்சிறந்த கூட்டத் தொடர் - வெங்கையா நாயுடு பெருமிதம்
x
தினத்தந்தி 7 Aug 2019 2:17 PM IST (Updated: 7 Aug 2019 2:17 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற கூட்டத்தொடர் 17 ஆண்டுகளில் முதல்முறையாக சிறப்பாக நடந்துள்ளது. மாநிலங்களவையின் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெங்கையா நாயுடு கூறினார்.

புதுடெல்லி

இன்று காலை மாநிலங்களவை கூடியதும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜிற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

சுஷ்மா ஸ்வராஜ் எனக்கு சகோதரியை போன்றவர். என்னை அன்போடு அண்ணா என்று தான் அழைப்பார்.  ஒவ்வொரு ஆண்டும் எனக்கு ராக்கி கட்டுவார். சுஷ்மா சுவராஜ் மறைவால் சிறந்த நாடாளுமன்றவாதியையும், மக்களின் உண்மையான குரலையும் இந்த தேசம் இழந்துள்ளது என கூறினார்.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான இடஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாவது திருத்த மசோதாவை திரும்பப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் கலாச்சார துறை அமைச்சர் ஜாலியன் வாலாபாக் நினைவு மசோதாவை தாக்கல் செய்தார். 

இது அவையில் எந்தவொரு விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய ஆனந்த் ஷர்மா, கடைசி நாளில் எந்தவொரு விவாதமும் செய்ய விரும்பவில்லை. இந்திய சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை அரசு அங்கீகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும். 

இந்த மசோதாவை அரசு மறுமுறை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இது எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. 

அப்போது பாஜக உறுப்பினர்கள் இருக்கையை தட்டி வரவேற்றனர். 249-வது மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவை செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். 

அப்போது பேசிய அவர், மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஆகியவற்றை நிறைவேற்றிய போது, மாநிலங்களின் உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது. தபால் துறை தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக உறுப்பினர்கள் தெரிவித்ததை அடுத்து, அதனை அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. 

இந்த மாநிலங்களவை கூட்டத் தொடரில் 35 அமர்வுகளில், மொத்தம் 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 17 ஆண்டுகளில் இதுவே மிகச்சிறந்த கூட்டத் தொடர் ஆகும். நடப்பு கூட்டத் தொடரில் எந்தளவிற்கு உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய புள்ளி விவரங்களை தாக்கல் செய்கிறேன். 

முதல் முறை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறி முடித்தார். இதையடுத்து மாநிலங்களவை கூட்டத் தொடர் நிறைவு பெற்றது. 

Next Story