ஜம்மு-காஷ்மீர் வங்கியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மத்திய அரசு
காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இந்நிலையில், அம்மாநிலத்தின் வங்கியான ஜம்மு-காஷ்மீர் வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர உள்ளது.
புதுடெல்லி
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இந்நிலையில், அம்மாநிலத்தின் வங்கியான ஜம்மு-காஷ்மீர் வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர உள்ளது.
இதுவரை ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அம்மாநிலத்துக்கென்று தனி அதிகாரம் பெற்ற ஜம்மு-காஷ்மீர் வங்கி செயல்பட்டு வந்தது. கிட்டத்தட்ட ரிசர்வ் வங்கிக்கு நிகரான அதிகாரம் பெற்றதாக ஜம்மு-காஷ்மீர் வங்கி இயங்கி வந்தது. இந்நிலையில் அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திங்கட்கிழமை அன்று நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவுள்ளது.
தற்போது ஜம்மு காஷ்மீர் அரசு அவ்வங்கியின் 60 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக மாற்றப்படும் நிலையில், அவ்வங்கியின் மீதான மொத்தக் கட்டுப்பாடும் மத்திய அரசின் கீழ் வந்துவிடும். அதன்படி, அவ்வங்கிக்கான தலைமை நிதி அதிகாரி மற்றும் இயக்குநர்கள் நியமனங்களை மத்திய நிதி அமைச்சகமே மேற்கொள்ளும். இந்நிலையில், அவ்வங்கியை ஒருங்கிணைப்பதற்கான வழிகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
பிரிவினைவாதிகளுக்கு இவ்வங்கியிலிருந்து நிதி அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டால், அவ்வங்கியின் தலைவர் பர்வீஸ் அகமது நிக்ரோ பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் பங்கு சந்தையில் ஜம்மு-காஷ்மீர் வங்கியின் பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story