காஷ்மீர்: 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு


காஷ்மீர்: 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க  சுப்ரீம் கோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 1:01 PM IST (Updated: 8 Aug 2019 1:01 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதை எதிர்த்து செவ்வாய்க் கிழமை அன்று சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் கருத்தை அறியாமல், சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு நீக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதம் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

ஆகஸ்ட் 12 அல்லது 13ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா, வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்து விட்டார். தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் வழக்கு பட்டியலிடப்படுவதற்காக வைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரில் தற்போது அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவும், தகவல் தொடர்பு வசதிகளை மீண்டும் கொடுக்க உத்தரவிடக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்கவும் சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

Next Story