சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு தள்ளுபடி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது செல்லும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு நடத்திய தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பின்னர் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிக்காக அழைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, “பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து கடந்த மார்ச் 7-ந் தேதி தீர்ப்பு கூறியது. அத்துடன், முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்துவிட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும்” என்றும் கூறியது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரசாணை செல்லும்
இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்தும், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை செல்லும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story