கொச்சி விமான நிலையம் நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது. இதனையடுத்து கொச்சி விமான நிலையம் நாளை முதல் செயல்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொச்சி,
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்படி என்ற இடத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. 40 பேர் வரை நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள பெரியார் ஆறு மற்றும் கால்வாயில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டது.
இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் வெள்ள நீர் வடிய தொடங்கி உள்ளதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் அனைத்து விமான சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார். விமான ஓடுபாதையில் வெள்ள நீர் வடிந்து வருவதாகவும், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மழையால் சேதம் அடைந்த 8 விமானங்களில் 6 விமானங்களுக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. மீதமுள்ள 2 விமானங்கள் சோதனை ஓட்டம் நடந்து முடிந்த பிறகு நாளை மதியம் வழக்கம் போல் விமானம் புறப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story