கேரளாவில் ஒரு கி.மீ. தூரம் நிலச்சரிவு: 50 பேர் சிக்கி உள்ளதாக தகவல்
கேரளாவில் கவலப்பாரா என்னும் இடத்தில் ஒரு கி.மீ. தூரம் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவனந்தபுரம்,
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. தேயிலை தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ரெயில் தண்டவாளங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள கவலப்பாரா என்ற இடம் நிலச்சரிவில் புதைந்து விட்டதாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக இடம் நிலச்சரிவில் மூடப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலச்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர் மழை காரணமாக கவலப்பாரா இடத்துக்கு செல்ல மீட்புப்படையினரும் திணறி வருகின்றனர். தொடர் மழையால் மீட்புப்பணி பாதிக்கப்படுவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story