வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் - மம்தா பானர்ஜி


வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 11 Aug 2019 9:17 PM IST (Updated: 11 Aug 2019 9:17 PM IST)
t-max-icont-min-icon

வெறும் அரசியல் மட்டுமே பா.ஜனதா அரசின் திட்டம் என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.


 2018-19ம் ஆண்டுக்கான மாநிலங்களின் ஜி.டி.பி. (மொத்த உள்நாட்டு உற்பத்தி) விகிதத்தை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. 

இதில் மேற்கு வங்காளம் 12.58 சதவீதம் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தை ஆந்திரா 11.02 சதவீதத்துடனும், மூன்றாவது இடைத்தை பீகார் 10.53 சதவீததுடனும் பெற்றுள்ளது.  இந்த பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக மாநில மக்களுக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அத்துடன் மத்திய அரசையும் அவர் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,  மத்திய அரசின் அறிக்கைப்படி 2018-19ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேற்கு வங்காளம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

மத்திய அரசின் கொள்கை முடக்கம் மற்றும் ஆழமான பொருளாதார மந்த நிலையால், ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிப்பு மற்றும் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பு திண்டாட்டம் இருந்த போதும் நமது மாநில வளர்ச்சியில் சாதனை படைத்து உள்ளோம். புதிய திட்டங்களுக்கான முதலீடு கடந்த ஜூன் 2019 காலாண்டில் 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக 81 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய (மார்ச்) காலாண்டில் 87 சதவீதமாக இருந்தது. அதுவும் முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிடும் போது குறைவாகும்.

நமது நாட்டின் தற்போதைய உண்மை நிலையை ஒவ்வொருவரும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். மத்திய பா.ஜனதா அரசு தனது திட்டத்தை, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் இருந்து ‘அரசியல், அரசியல் மற்றும் வெறும் அரசியல்’ என்ற நிலைக்கு மாற்றி விட்டது. போர் தளவாட தொழிற்சாலை வாரியம், பி.எஸ்.என்.எல்., ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறைகளை மத்திய அரசு தனியார் மயமாக்குவதன் மூலம் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மோட்டார் வாகன துறை மற்றும் தோல் துறைகளில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளது. 

ஏனெனில் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் மத்திய அரசு 2–வது முறையாக ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது நடப்பது என்னவென்றால், ஏற்கனவே வேலையில் இருந்தவர்கள் கூட தங்கள் வேலையை இழந்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார். 


Next Story