கர்நாடகா: கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு


கர்நாடகா: கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 4:51 AM GMT (Updated: 12 Aug 2019 4:51 AM GMT)

கர்நாடகாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த மாத துவக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. அணைகளில்  இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நேற்று மாலை வரை மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 14 பேரைக் காணவில்லை. 5 லட்சத்து 81 ஆயிரத்து 702 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  மீட்கப்படும் மக்களுக்காக மாநிலம் முழுவதும் 17 மாவட்டங்களில் 1168 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. பெலகாவி மாவட்டம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் மட்டும் 12 பேர் இறந்துள்ளனர்.

தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், பல மாவட்டங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதாக முதலமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாவட்டங்களில் இன்று முதல் மழை  குறையத் தொடங்கியிருப்பதாகவும், கடலோர மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story