கேரளாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய ராகுல் காந்தி


கேரளாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய ராகுல் காந்தி
x
தினத்தந்தி 12 Aug 2019 12:32 PM IST (Updated: 12 Aug 2019 12:32 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் காந்தி நிவாரண பொருட்களை வழங்கினார்.

வயநாடு,

கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்துக்கு சென்றுள்ள அந்த தொகுதியின் எம்.பி ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். நேற்று, மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே பொதுகல்லுவில்  அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்ற அவர் அங்கு தங்கி  இருந்தவர்களிடம் பாதிப்பை கேட்டறிந்தார்.

பின்னர், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கவலப்பரா கிராமத்துக்கு சென்று சேதங்களை பார்வையிட்டார். மலப்புரம் மாவட்டத்தின் 3 சட்டசபை தொகுதிகள் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் வருகின்றன. அங்கு சேத  பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். இந்நிலையில், 2-வது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வரும் ராகுல் காந்தி, நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

முன்னதாக ராகுல் காந்தி இன்று காலை தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "என்னுடைய வயநாடு மக்களவைத் தொகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுவதால், அனைவரும் நிவாரண பொருட்கள் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும்,  அனைவரும் அளிக்கும் நிவாரணப் பொருட்கள் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சேகரிப்பு மையம் மூலம் பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும். அனைவரும் உதவுங்கள்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளா

கேரள மாநிலத்தின் வடபகுதியில் 8 மாவட்டங்களில் கடந்த 8-ந் தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா, வயநாடு மாவட்டம் புதுமலா ஆகிய கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன.

மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா கிராமம், 35 வீடுகளுடன் 65 பேர் மட்டும் வசித்த கிராமம் ஆகும். அங்கு 8-ந் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, 60 பேர் உயிருடன் புதையுண்டு இருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. 12 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் மலைபோல குவிந்துள்ளது. வயநாடு மாவட்டம் புதுமலா கிராமம் தேயிலை தோட்டங்கள் நிறைந்த கிராமம் ஆகும். எண்ணற்ற வீடுகள், கட்டிடங்கள், கோவில், மசூதி ஆகியவை இருந்தன. நிலச்சரிவை தொடர்ந்து எல்லாம் தரைமட்டமாகி விட்டன.

மழை மற்றும் நிலச்சரிவுக்கு  பலி எண்ணிக்கை 72  ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இன்னும் ஏராளமானோரை காணவில்லை என்பதால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மாநிலம் முழுவதும் 1,551 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story