ஜம்மு- காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது: பிரதமர் மோடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை அரசு துடைக்கும் என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா, மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தலைநகர் டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்கின. வாத்தியக்குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பிரதமர் மோடி, தொடர்ந்து 6-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார். முன்னதாக முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார்.
டெல்லியில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக உரை ஆற்றினார். சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி தனது உரையை துவங்கிய பிரதமர் மோடி கூறியதாவது:- இந்தியாவில் உள்ள சகோதர சகோதரிகளின் வாழ்வு சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புதிய அரசு பதவியேற்று மீண்டும் என மூவர்ண கொடியை ஏற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும். ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் அரசு செயல்பட்டு வருகிறது. பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே பல முக்கிய முடிவுகளை அரசு எடுத்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் கொண்டாடி வருகின்றனர்.
370- ரத்து செய்யப்பட்டதை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், வல்லபாய் படேலின் கனவு நனவாகியுள்ளது. விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். நாடு மாறுமா எனக்கேட்டார்கள் நான் மாற்றிக்காட்டினேன். அனைவரும் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டு வருகிறோம்” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.
Related Tags :
Next Story