தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டர்கள் :வெளியுறவுத்துறை விளக்கம்


தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டர்கள் :வெளியுறவுத்துறை விளக்கம்
x
தினத்தந்தி 1 Sept 2019 9:31 PM IST (Updated: 1 Sept 2019 9:31 PM IST)
t-max-icont-min-icon

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டர்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் உண்மையான குடிமக்களின் பெயர்களை கொண்டதுதான், என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேடு ஆகும். இந்த பதிவேடு முதன்முதலாக அசாமில் 1951-ம் ஆண்டு தயாரித்து வெளியிடப்பட்டது. அப்போது அங்கு குடிமக்கள் எண்ணிக்கை 80 லட்சம் ஆகும். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள் தொகை 3 கோடியே 11 லட்சம். இந்த நிலையில் இப்போது அசாம் மாநிலத்தில் இந்த தேசிய குடியுரிமை பதிவேடு புதுப்பிக் கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு புதுப்பிக்கப்பட்டு நேற்று காலை வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்காக 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரத்து 661 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தேசிய குடியுரிமை பட்டியல் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தங்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா என்று கண்டறிவதற்காக அந்தப் பட்டியல் வைக்கப்பட்டிருந்த சேவா கேந்திரங்கள், துணை கமிஷனர் அலுவலகங்கள், வட்டார அலுவலகங்களில், ஊராட்சி அலுவலகங்களில் கூட்டம் அலை மோதியது. அங்கு பதிவேட்டை பார்த்ததில் பெயர் இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இப்படி 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் பெயர்கள் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெறவில்லை. இப்படி பெயர் இடம்பெறாதவர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். பெயர் இடம்பெறாதவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்தது. 

இந்தநிலையில், அசாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் 19 லட்சம் பேரின் பெயர் இல்லாதது பற்றி வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதவர்கள் கைது செய்யப்பட மாட்டர்கள். குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இல்லாதோர் ஏற்கனவே உள்ள சலுகைகளை சட்டப்படி பெறலாம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story