காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார்.
ஜம்மு,
காஷ்மீர் எல்லையில் கடந்த ஜூலை மாதம் முதல் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் இது மேலும் அதிகரித்தது. கடந்த 2 மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த அத்துமீறிய தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. எல்லையோர மாவட்டங்களில் ஒன்றான பூஞ்சில், கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளால் மதியம் 1 மணியளவில் தாக்குதலை தொடங்கியது. இதில் ஷாபூர் கெர்னி பகுதியில் பணியில் இருந்த இந்திய வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே சண்டை மூண்டது. அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இந்த தாக்குதலால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்னதாக ரஜோரியில் கடந்த 30–ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் 15 வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story