நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற வாலிபர் கைது - போலீசார் தீவிர விசாரணை


நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற வாலிபர் கைது - போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 2 Sept 2019 11:42 AM IST (Updated: 3 Sept 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுடெல்லி,

இந்திய ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படுவது நாடாளுமன்றம். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காகவும், சிறந்த நிர்வாகத்தை உறுதிச்செய்யும் நோக்கிலும் சட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். இந்த நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் காலங்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் இங்கு போதுமான பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் விடுமுறை தினமான நேற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் காலை சுமார் 10.45 மணியளவில் வாலிபர் ஒருவர் திடீரென நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்றார். உடனே அவரை வாசலில் நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் கத்தி ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அந்த கத்தியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சாகர் (வயது 26) என தெரியவந்தது. அவர் எதற்காக கத்தியுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

அதேநேரம் இந்த சம்பவத்தில் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் எதுவும் இல்லை எனவும், அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரிவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்துக்குள் வாலிபர் ஒருவர் கத்தியுடன் நுழைய முயன்ற இந்த சம்பவம் டெல்லியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story