விமானப்படை தளபதியுடன் மிக் -21 ரக போர் விமானத்தில் பறந்த அபிநந்தன்


விமானப்படை தளபதியுடன் மிக் -21 ரக போர் விமானத்தில் பறந்த அபிநந்தன்
x
தினத்தந்தி 2 Sept 2019 3:12 PM IST (Updated: 2 Sept 2019 3:12 PM IST)
t-max-icont-min-icon

பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து மிக்-21 ரக போர் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கினார்.

புல்வாமா தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது.  இதனைத் தொடர்ந்து,  இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் இடையே வானில் ஏற்பட்ட மோதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர்விமானத்தை அபிநந்தன் தான் இயக்கிய மிக் பைஸன் ரக விமானத்தால் சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் பகுதிக்குள் பாரசூட் மூலம் குதித்தார்.

இதையடுத்து அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான், இந்தியா உள்பட சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால்,  உடனடியாக விடுவித்தது.  பிடிபட்ட போது,  பாகிஸ்தானியர்கள் அவரை தாக்கியதால், படுகாயம் அடைந்திருந்த அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  6 மாதங்கள் ஓய்வில் இருந்த அபிநந்தன் கடந்த மாதம் பணிக்கு திரும்பினார். ஆனால்,  மிக் ரக விமானத்தை இயக்க அவருக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் அனைத்துவிதமான பரிசோதனைகளிலும் தேர்வாகி மீண்டும் விமானத்தை இயக்கத் தொடங்கினார்.

அபிநந்தனுக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கி தேர்ச்சி பெற்றார். இந்நிலையில், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் இருந்து விமானப்படை ஏர்சீப் மார்ஷல் தனோவாவுடன், மிக்-21 ரக போர் விமானத்தில் அபிநந்தன் ஒன்றாக வானில் பறந்தார். ஏறக்குறைய 30 நிமிடங்கள் வானில் மிக்-21 ரக போர்விமானத்தில் இருவரும் பறந்தனர். 

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய துணிச்சல் மிக்க செயலுக்காக அபிநந்தனுக்கு வீர் சக்கரா விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். 

Next Story