91 வயது முதியவரை குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து கொலை செய்த வேலைக்காரன்
91 வயது முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கடத்திச் சென்று கொலை செய்த வீட்டு வேலைக்காரனை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
தெற்கு டெல்லியின் கைலாஷ் -1 பகுதியில் 91 வயதான கிருஷ்ணன் கோஷ்லா எனும் முன்னாள் அரசு ஊழியரும், 87 வயதான அவரது மனைவியும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணன் கோஷ்லாவை காணவில்லை என்று அவரது குடும்பத்தார் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் வீட்டில் வேலை செய்த கிஷன் என்பவர் வீட்டு உரிமையாளரைக் கடத்தியதாகத் தெரிய வந்தது. போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியதில் கிஷன் பிடிபட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில் தாம் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருஷ்ணன் கோஷ்லாவின் வீட்டில் பணியாற்றி வந்துள்ளான். கிருஷ்ணன் கோஷ்லா வேலை வாங்கிய விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதால் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாக கூறினான்.
கடந்த சனிக்கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு வந்த கிஷன், கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவிக்கு டீ-யில் மயக்க மருந்து கொடுத்து அவர்கள் சுயநினைவு இழந்த பின்னர் நண்பர்கள் 5 பேரின் உதவியோடு கிருஷ்ணனை ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து டெம்போவில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளான்.
ஆறு பேர் சேர்ந்து குளிர்சாதனப் பெட்டியை டெம்போவில் ஏற்றும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளன. செக்யூரிட்டி இதுகுறித்து கேட்டதற்கு குளிர்சாதனப் பெட்டியை பழுது பார்ப்பதற்காக தூக்கிச் செல்வதாகத் தெரிவித்துத் தப்பியுள்ளனர்.
பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலைப் புதைக்க சங்கம் விகார் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 6 அடிக்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அங்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றினர்.
கிஷன் தவிர, தீபக் யாதவ், பிரதீப் சர்மா, சர்வேஷ் மற்றும் பிரபு தாயல் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் வேலைக்காரன் முதியவரை கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story