கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது - அமலாக்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை


கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது - அமலாக்கத்துறையினர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Sept 2019 8:44 PM IST (Updated: 4 Sept 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி வீட்டில் கணக்கில் வராத பணம் ரூ.8½ கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அவரை அதிரடியாக கைது செய்தனர்.

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் டி.கே.சிவக்குமார். ராமநகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் முன்னாள் மந்திரியும் ஆவார். இவருடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.8.59 கோடியை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் டி.கே.சிவக்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, டி.கே.சிவக்குமார் ‘ஹவாலா’ முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணியாற்றும் அனுமந்தய்யா என்பவருடன் சேர்ந்து ‘ஹவாலா’ முறையில் பணப்பரிமாற்றம் செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து முறைகேடான பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக டி.கே.சிவக்குமார், அனுமந்தய்யா ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

மேலும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி டி.கே.சிவக்குமார் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு கடந்த மாதம் 29-ந் தேதி தள்ளுபடி செய்தது.

இதன் தொடர்ச்சியாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் டி.கே.சிவக்குமாருக்கு உடனடியாக சம்மன் வழங்கப்பட்டது. அதில் 30-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவரது சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு கோரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த்குமார், இடைக்கால முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். மேலும் டி.கே.சிவக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல் 30-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரிய மனு மீது வழங்கப்பட்ட தீர்ப்பிலும் திருத்தம் செய்ய முடியாது என்று நீதிபதி கூறிவிட்டார்.

இதையடுத்து கடந்த 30-ந் தேதி டி.கே.சிவக்குமார் டெல்லி சென்று அங்குள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பிறகு 31-ந் தேதியும், நேற்று முன்தினமும் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். இந்த 3 நாட்களும் பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறையினர் கேட்டனர். 4-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேற்று மதியம் 12 மணியளவில் டி.கே.சிவக்குமார் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இரவு 8.45 மணி வரை விசாரணை நடைபெற்ற நிலையில் திடீரென்று டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.

டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருப்பது பற்றி அறிந்தவுடன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு கூடியிருந்த அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட டி.கே.சிவக்குமாரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களின் அலுவலகத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து காரில் ஏற்றி சென்றனர். இந்த வேளையில் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரசார் அந்த காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி டி.கே.சிவக்குமாரை அங்கிருந்து அழைத்து சென்றனர். அதன்பிறகு டி.கே.சிவக்குமாருக்கு டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் ராமநகர், கனகபுரா உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநகரில் மைசூரு-பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், சாலை நடுவே டயர்களை தீயிட்டு கொளுத்தினார்கள். மேலும், அமித்ஷாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பா.ஜனதாவுக்கு எதிராகவும், மோடி, அமித்ஷாவுக்கு எதிராகவும் டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநகர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


Next Story