அப்பாச்சி ஹெலிகாப்டரில் அப்படி என்ன சிறப்பு?


அப்பாச்சி ஹெலிகாப்டரில் அப்படி என்ன சிறப்பு?
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

அப்பாச்சி ஹெலிகாப்டரில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.


சிங்கநடை போடும் ஆற்றல் கொண்டவை இந்தியாவின் முப்பெரும் படைகள்.

இ தை உலகுக்கு பறைசாற்றுகிற விதத்தில் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுடனும், சீனாவுடனும் போட்டி போடுகிற வகையில் இந்தியா முப்படைகளையும் நவீனமயமாக்கி வருகிறது.

அதன் ஒரு அம்சம்தான், ‘அப்பாச்சி ஏஎச்-64 இ’ ஹெலிகாப்டர்கள். இந்த ஹெலிகாப்டர்கள் அதிநவீன ஹெலிகாப்டர்கள்.

இந்த ஹெலிகாப்டர்களில் அப்படி என்ன அதிநவீனம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இருக்கத்தான் செய்கிறது.

முதல் அம்சம், அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்து அளிக்கும் உலகிலேயே அதிநவீன மேம்படுத்தப்பட்ட பன்முக போர் ஹெலிகாப்டர் இதுதான்.

அதிவேகத்துக்கான உயர் செயல் திறன் கொண்ட 2 டர்போஷாப்ட் என்ஜின்களைக் கொண்டுள்ளன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 284 கி.மீ.

வானில் இருந்து புறப்பட்டுச்சென்று தரையில் தாக்குதல்கள் நடத்தும் ஏவுகணைகள், லேசர் வழிகாட்டும் ஏவுகணைகள், 70 எம்.எம். ஹைட்ரா ராக்கெட்டுகள், வானில் இருந்து புறப்பட்டுச்சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் இத்தனையும் இந்த நவீன ரக ஹெலிகாப்டரில் அடக்கம்.

இன்னும்கூட இருக்கிறது.

இதில் 1,200 தோட்டாக்களுடன் கூடிய ஒரு 30 எம்.எம். செயின் துப்பாக்கியும் உண்டு.

தீ கட்டுப்பாட்டு ரேடார், அதிநவீன சென்சார்களும் இந்த ஹெலிகாப்டரில் இருக்கின்றன.

விமானி, துணை விமானி என இருவர் இயக்குவார்கள்.

இந்த ‘அப்பாச்சி ஏஎச்-64 இ’ ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படையின் தாக்குதல் திறன் மேம்படும்.

எனவேதான், 22 விமானங்களை வாங்குவதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் போயிங் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் போட்டது.

இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான், எகிப்து, கிரீஸ், சவுதி அரேபியா உள்ளிட்ட 15 நாடுகள் தங்கள் படையில் கொண்டு உள்ளன.

அந்த வகையில் இந்தியா, ‘அப்பாச்சி ஏஎச்-64 இ’ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்துகிற 16-வது நாடு என்ற சிறப்பைப் பெறுகிறது.

இதுவரை உலகமெங்கும் 2,200 அப்பாச்சி ஏஎச்-64 இ ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்டதில் 8 ஹெலிகாப்டர்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியா வந்து சேர்ந்தன.

இந்த ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் சேர்ப்பதற்கான விழா, பஞ்சாப் மாகாணம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நேற்று நடந்தேறியது.

இதே பதன்கோட் விமானப்படை தளத்தை தகர்க்கும் நோக்கத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 6 பேர் 2016-ம் ஆண்டு, ஜனவரி 2-ந்தேதி நுழைந்ததும், அங்கு நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதும், நமது பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 7 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து, விமானப்படை தளத்தை காத்ததும் நினைவுகூரத்தக்கது.

அதே தளத்தில் நேற்று நடந்த விழாவில்தான் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா இந்த 8 ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படையில் முறைப்படி சேர்த்தார்.

அப்போது அவர் பேசும்போது, “அப்பாச்சி ஏஎச்-64 இ ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்தும்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அப்பாச்சி ஏஎச்-64 இ ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது பற்றி போயிங் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சலில் குப்தா கூறும்போது, “இந்திய ஆயுதப்படையின் நவீனமயமாக்கல் தேவைகளை நிறைவேற்றி வைக்க தயாராக இருக்கிறோம். அப்பாச்சி ஹெலிகாப்டர்களைப் பொறுத்தமட்டில் அவை இந்திய விமானப்படையின் இன்றியமையாத சொத்து ஆகும்” என குறிப்பிட்டார்.

இந்திய விமானப்படையில் ஏற்கனவே உள்ள வயதான எம்.ஐ.-35 ரக ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக அப்பாச்சி ஏஎச்-64 இ ஹெலிகாப்டர்கள் அமைவதாக விமானப்படை தளபதி தனோவா குறிப்பிட்டார்.

8 ஹெலிகாப்டர்கள் வந்து விட்ட நிலையில் எஞ்சிய 14 ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்தார்.

இந்த அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சியை விமானப்படை விமானிகள் அமெரிக்கா போய் பெற்று வந்து விட்டார்கள்.

ஆக, இந்திய விமானப்படை பட்டையைக் கிளப்பப்போகிறது.


Next Story