தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது
தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.
புதுடெல்லி,
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆண்டுதோறும் ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் வாழ்க்கையை செழுமையாக்குதல், ஆசிரியர் பணியை கொண்டாடுதல் போன்ற நோக்கங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘தேசிய நல்லாசிரியர் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த ஆசிரியர்களாக 46 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூலம் இந்த தேர்வுப்பணி நடைபெற்றது.
தமிழகத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோபிச்செட்டிப் பாளையம் டைமண்ட் ஜுப்லி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.மன்சூர் அலி, கரூர் கே.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆர்.செல்வகண்ணன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் கூனிச்சம்பேட் பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எஸ்.சசிகுமார் தேர்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, விருதுக்கு தேர்வுபெற்ற ஆசிரியர்கள் அனைவரும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களை கடந்த 3-ந்தேதி பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் ஆசிரியர் தினமான நேற்று, டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி பேசினார்.
விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் போக்ரியால் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story