தடைகளை தாண்டி நிலவில் தடம் பதிக்கும் ‘சந்திரயான்-2’
இரவில் வானில் வட்ட வடிவில் ஜொலிக்கும் நிலவினை காட்டி குழந்தைகளுக்கு உணவூட்டிய காலம் போய், நிலவுக்கே சென்று மனிதன் உணவருந்தும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.
அரை நூற்றாண்டுக்கு முன்பே அதை நிரூபித்து காட்டியது அமெரிக்கா. நாம் வாழும் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவுக்கு 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி மனிதனையே அனுப்பி சாதனை படைத்தது.
அந்த காலக்கட்டத்தில், விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா - ரஷியா இடையே தான் கடும் போட்டி நிலவியது. நிலா பற்றிய ஆராய்ச்சியில் 1930-ம் ஆண்டு முதலே ரஷியா ஆளில்லா விண்கலங்களை அனுப்பி ஈடுபடத் தொடங்கினாலும், மனிதனை அனுப்பும் முயற்சியில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அமெரிக்காவோ அப்பல்லோ-11 விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்டிரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய 3 பேரை நிலவுக்கு அனுப்பி தங்கள் நாட்டு கொடியை அங்கு ஊன்றியது. அதன்பிறகு, குறுகிய காலத்திற்குள் 24 பேர் நிலவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பி இருந்தாலும், இடையில் நீண்ட காலமாக நிலவு பற்றிய ஆராய்ச்சி பெரிய அளவில் நடைபெறவில்லை. ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டி இருந்ததால், எந்தநாடும் அதில் ஆர்வம் காட்டவில்லை.
இப்போது நிலவு பற்றிய ஆராய்ச்சியில் இந்தியா - சீனா இடையே தான் நீயா?, நானா? போட்டி நிலவுகிறது. இந்தியா 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பி உலக நாடுகளை புருவத்தை உயர்த்தி பார்க்க வைத்தது. 2 ஆண்டு காலம் ஆய்வு மேற்கொள்ள சென்ற சந்திரயான்-1 நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் ஒப்புக்கொண்டனர். என்றாலும், 293 நாட்களிலேயே தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், சந்திரயான்-1 தனது ஆய்வை நிறுத்திக் கொண்டது. இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளும் சந்திரயான்-1 தனது பயணத்தை 95 சதவீதம் வெற்றிகரமாக நிறைவுசெய்ததாக அறிவித்தனர்.
அடுத்து சீனா, இந்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி 3-ந் தேதி நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. விண்கலத்தில் அனுப்பப்பட்ட பருத்தி விதை நிலவில் துளிர்விட்டு, தாவரங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உறுதி செய்தது. 2025-ம் ஆண்டுக்குள் மனிதனை அனுப்பவும் சீனா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சீனாவின் ஆராய்ச்சி நிலவில் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்தியா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி நிலவின் தென்துருவத்தில், யாரும் ஆய்வு மேற்கொள்ளாத பகுதிக்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி அசத்தியது. விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் ஆகிய கருவிகள் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் பிரிந்தன. ஆர்பிட்டர் நிலவை தொலைதூரத்தில் இருந்தும், விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியும் ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறது. அந்த வகையில், 47 நாள் தொடர் பயணத்துக்கு பிறகு நாளை (சனிக்கிழமை) அதிகாலை நிலவின் தென் துருவ பகுதியில், வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தடம் பதிக்கிறது. சமீபத்தில் சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலத்துக்கு செலவான தொகை ரூ.5,759 கோடி. ஆனால், இந்தியா ரூ.978 கோடி செலவிலேயே இந்த சாதனையை நிகழ்த்தி காட்டி இருக்கிறது. இதற்காக பல தடைகளை சந்திரயான்-2 காத்திருந்து கடக்க வேண்டியிருந்தது.
முதலில், பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதைக்கு சந்திரயான்-2 கொண்டுவரப்பட்டது. அதன் போக்கிலேயே சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில், நிலா (சந்திரன்) அருகில் வந்தபோது, அதன் ஈர்ப்பு பகுதிக்கு சந்திரயான்-2 மாற்றப்பட்டது. அதன்பின்னர், நிலவை சுற்றிக் கொண்டிருந்த சந்திரயான்-2, அதன் தென்துருவ பகுதிக்கு அருகே நெருங்கியபோது, வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. விண்கலத்தின் இரு பகுதிகளான ஆர்பிட்டரும், விக்ரம் லேண்டரும் பிரிக்கப்பட்டது. இதில், ஆர்ப்பிட்டர் சந்திரனுக்கு வெளியே 100 கிலோ மீட்டர் தூரத்தில் அதனை சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில், விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதி நோக்கி மெதுவாக செலுத்தப்பட்டது. 47-வது நாளான நாளை அதிகாலை லேண்டர் நிலவில் பாதுகாப்பாக தரை இறங்குகிறது.
இனி சந்திரனுக்கு வெளியே சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர், 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கழுகுப் பார்வையில் சந்திரனின் தரைப்பகுதியை ஆய்வு செய்து, பூமிக்கும், சந்திரனில் இருக்கும் லேண்டருக்கும் ஒரே நேரத்தில் தகவல்கள் அனுப்பும். அதற்காக, ஆர்பிட்டரில் சந்திரனின் தரைப்பகுதியை துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா, தனிமங்களை கணக்கிட எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், உறைபனியை புகைப்படம் எடுக்க நவீன கேமரா, துருவப் பகுதிகளை படம் பிடிக்கும் கேமரா, வளிமண்டலத்தை ஆய்வு செய்ய எக்ஸ்புளோரர்-2 கருவி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், சந்திரனின் தரையிறங்கும் லேண்டரில், தரையை ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் கருவி, அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி, தரைப்பகுதி வெப்பம் மற்றும் பண்புகளை கண்டறியும் கருவி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
பூமியில் 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதைப் போல, நிலவில் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு என்ற நிலை இருக்கிறது. பூமியைவிட நிலா மெதுவாக சுற்றுவதே அதற்கு காரணம் ஆகும். நிலவில் தரையிறங்கும் லேண்டர் கருவியில் உள்ள அத்தனை கருவிகளும் சூரிய சக்தியில் இயங்கக்கூடியது. அப்படிப் பார்த்தால், இந்தக் கருவிகள் அனைத்தும் தொடர்ந்து 14 நாட்கள் வெளிச்சத்தில் இயங்கும். அடுத்த 14 நாட்கள் இருளில் ஓய்வெடுக்கும். அதேபோல், பகலில் வெப்பத்தின் அளவு 130 செல்சியஸ் ஆகவும், இரவில் குளிர், மைனஸ் 170 டிகிரியாகவும் இருக்கும். இத்தனை சவால்களையும் தாண்டித்தான், சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள இருக்கிறது. சந்திரனில் இருந்து என்ன புதிய தகவல் வரப்போகிறது? என்று எதிர்பார்த்து காத்திருக்கும் விஞ்ஞானிகளைப் போல், நாமும் ஆர்வத்துடன் காத்திருப்போம்.
சந்திரயான்-2 நிலவில் நிகழ்த்தப்போகும் சாதனை இஸ்ரோவின் பொன் விழா ஆண்டில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட இருக்கிறது.
நிலவில் என்ன தான் இருக்கிறது?
நிலவில் இதுவரை நடைபெற்ற ஆராய்ச்சியில், அங்கு ஹீலியம் வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை பூமிக்கு கொண்டு வந்தால், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு எரிசக்தியாக பயன்படுத்த முடியுமாம். அதேபோல், டைட்டானியம், யுரேனியம் போன்ற தாதுக்களும் அங்கு நிறைய இருக்கிறது. எனவே, மனிதர்களை நிலவில் வாழ்விப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ இல்லையோ, அங்குள்ள கனிமங்களை பூமிக்கு எடுத்து வருவதற்கான ஆராய்ச்சிகளே தற்போது மேலோங்கி இருக்கிறது.
அடுத்து இந்தியாவும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டம் தீட்டி வருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருகிறது. அதிலும் இந்தியா சாதித்தால், விண்வெளி ஆராய்ச்சியில் 4-வது இடத்துக்கு முன்னேறுவதுடன் வல்லரசு நாடுகள் பட்டியலிலும் இடம் பிடிக்கும்.
அந்த 47 நாட்கள்...
ஜூலை 22-ந் தேதி - சந்திரயான்-2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததுடன், புவி வட்டப்பாதையிலும் நிலை நிறுத்தப்பட்டது.
ஜூலை 24-ந் தேதி - புவி வட்டப்பாதையில் முதல் முறையாக சந்திரயான்-2 நிலை உயர்த்தப்பட்டது.
ஜூலை 26-ந் தேதி - 2-வது முறையாக நிலை அதிகரிக்கப்பட்டது.
ஜூலை 29-ந் தேதி - 3-வது முறையாக நிலை உயர்த்தப்பட்டது.
ஆகஸ்டு 2-ந் தேதி - 4-வது முறையாக நிலை அதிகரிக்கப்பட்டது.
ஆகஸ்டு 4-ந் தேதி - சந்திரயான்-2-வில் உள்ள விக்ரம் லேண்டர் பூமியை முதல்முறையாக படம் பிடித்தது.
ஆகஸ்டு 6-ந் தேதி - 5-வது முறையாக நிலை உயர்த்தப்பட்டது.
ஆகஸ்டு 14-ந் தேதி - புவி வட்டப்பாதையில் இருந்து நிலவு ஈர்ப்பு பகுதிக்கு சந்திரயான்-2 மாற்றும் பணி தொடங்கியது.
ஆகஸ்டு 20-ந் தேதி - நிலவு ஈர்ப்பு பகுதிக்குள் சந்திரயான்-2 வெற்றிகரமாக நுழைந்ததுடன் முதல்முறையாக நிலை உயர்த்தப்பட்டது.
ஆகஸ்டு 21-ந் தேதி - 2-வது முறையாக நிலை அதிகரிக்கப்பட்டது.
ஆகஸ்டு 22-ந் தேதி - முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்தது.
ஆகஸ்டு 26-ந் தேதி - 2-வது முறையாக நிலவை படம் பிடித்தது.
ஆகஸ்டு 28-ந் தேதி - 3-வது முறையாக நிலை உயர்த்தப்பட்டது.
ஆகஸ்டு 30-ந் தேதி - 4-வது முறையாக நிலை அதிகரிக்கப்பட்டது.
செப்டம்பர் 1-ந் தேதி - 5-வது முறையாக நிலை உயர்த்தப்பட்டது.
செப்டம்பர் 2-ந் தேதி - ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.
செப்டம்பர் 3-ந் தேதி - நிலவின் தென்துருவ பகுதி நோக்கி விக்ரம் லேண்டர் நகர்ந்தது.
செப்டம்பர் 4-ந் தேதி - தென்துருவ பகுதியை விக்ரம் லேண்டர் நெருங்கியது.
Related Tags :
Next Story