ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: 15 நாள் சி.பி.ஐ. காவல் முடிந்தது; ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைப்பு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 15 நாள் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, அவரை வருகிற 19-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. 5-வது முறையாக ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவலை 5-ந்தேதி (நேற்று) வரை நீட்டித்து கடந்த 3-ந்தேதி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.
ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அவரை தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய்குமார் குஹர் முன்பு ஆஜர்படுத்தினார்கள்.
விசாரணை தொடங்கியதும் சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் அமலாக் கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றிய தகவலை தெரிவித்தார். ப.சிதம்பரத்தை காவலில் வைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் தற்போது செயலிழந்து விட்டதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க கோரும் மனுவை தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், அவரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்கள்.
அவர்கள் வாதாடுகையில் கூறியதாவது:-
குற்றம் சாட்டப்பட்டவருக்கு (ப.சிதம்பரம்) எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவர் செல்வாக்கு மிகுந்தவர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவருக்கு எதிராக அவர்களிடம் ஆதாரம் எதுவும் இல்லை. அவர் சாட்சியங்களை கலைத்ததாகவும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே அவரை நீதிமன்ற காவலில் வைக்க தேவை இல்லை. அவரை சிறையில் அடைக்க சி.பி.ஐ. முயற்சிக்கிறது.
மனுதாரர் அமலாக்கத்துறையினரிடம் சரண் அடைய தயாராக இருக்கிறார். அவர்களின் காவலில் விசாரணைக்கு தயாராக இருக்கிறார். இந்த வழக்கில் ஏதாவது முதல் கட்ட ஆதாரம் இருந்தாலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதை புரிந்து கொள்ளலாம். அவரை நீதிமன்ற காவலில் வைப்பதற்காக சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்த மனுவில் அதற்கான நேரடியான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே எதற்காக அவரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்?
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீங்கள் எந்த கோரிக்கையின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கபில் சிபல், “மனுதாரரின் விடுதலையை கருத்தில் கொண்டு நான் வாதாடுகிறேன். மனுதாரரை சிறையில் அடைக்கும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருகிறீர்கள்” என்று கூறியதோடு, ஒருவரை காவலில் வைப்பது என்பது விசாரணை அமைப்பின் சட்டரீதியான உரிமை கிடையாது என்றும், அதற்கு முன்பு தேவையான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதாடுகையில் கூறியதாவது:-
நாம் மிகவும் தீவிரத்தன்மை கொண்ட ஒரு வழக்கை இங்கே நடத்தி வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவருக்கு டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் இருமுறை ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உள்ளன. ஆதாரங்களை கலைத்து விசாரணையை எப்படி திசை திருப்ப முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் போது நான் தெரிவிக்கிறேன். தற்போது வங்கி கணக்குகள் பற்றியும் பண பரிமாற்றங்கள் பற்றியும் விளக்கம் கோரி சில வெளிநாடுகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம். அமலாக்கத்துறை அனுப்பிய கடிதங்கள் பற்றியும் சுப்ரீம் கோர்ட்டுக்கு விரிவாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறிய துஷார் மேத்தா, இந்த வழக்கில் சாட்சி ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்ததோடு, சாட்சியங்கள் கலைக்கப்படும் என்று தங்கள் தரப்பு கூறுவது கற்பனையான வாதம் அல்ல என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து கபில் சிபல் வாதாடுகையில் கூறியதாவது:-
ஒருவருக்கு சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததும் அவரை நீதிமன்ற காவலுக்குத்தான் அனுப்பவேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லை. இந்த வழக்கில் உள்ள உண்மையை ஒவ்வொரு கட்டத்திலும் கோர்ட்டு தனது கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் செல்வாக்கு மிகுந்தவர் என்றால் அவரால் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கூறுவது எந்த வகையான வாதமாக இருக்க முடியும்? இதுபோன்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. (அப்போது, ஒரு வழக்கில் போலீஸ் காவல் மற்றும் நீதிமன்ற காவலில் வைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சில தீர்ப்புகளில் கூறிய கருத்துகளை அவர் வாசித்து காட்டினார்).
போலீஸ் காவலில் இருந்து நேரடியாக ஒருவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்கான தன்னிச்சையான உத்தரவு எதுவும் கிடையாது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆவணரீதியான பல தடயங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அவற்றை அவர் எப்படி கலைக்க முடியும்? இன்று (அதாவது நேற்று) சுப்ரீம் கோர்ட்டு அமலாக்கப்பிரிவு தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்ற எந்த வழக்கையும் பாதிக்காது என்று தெளிவாக கூறி இருக்கிறது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தேவை இல்லை.
இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், சி.பி.ஐ. மனு மீதான உத்தரவை சிறிது நேரத்துக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டு தனது அறைக்குள் சென்றார்.
சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் வந்து தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி, ப.சிதம்பரத்தை வருகிற 19-ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் வக்கீல் கபில் சிபல், மனுதாரர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவதால் இடைக் கால ஜாமீன் கோரும் மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் சிறையில் ப.சிதம்பரத்துக்கு தேவையான மூக்கு கண்ணாடி, மருந்துகள், மேற்கத்திய பாணியிலான கழிவறை வசதி, ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு மற்றும் கட்டில், குளியல் அறை ஆகிய வசதிகளை கொண்ட தனி அறை ஆகியவற்றை வழங்க கோரி சிதம்பரம் தரப்பில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு சி.பி.ஐ. தரப்பில், ப.சிதம்பரம் கோரும் அனைத்து வசதிகளையும் அளிக்க தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும், சிறை விதிமுறைகளின்படி அவருக்கு தேவையான வசதிகளை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.
ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை வாகனத்தில் ஏற்றி டெல்லியில் உள்ள திகார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள சிறை எண் 7-ல் தனி அறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறை எண் 7 பொருளாதார குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறை ஆகும்.
நேற்று வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் சரண் அடைவதற்கான மனு ஒன்றும் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை வருகிற 12-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி அஜய் குமார் குஹர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதற்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அமர்வில் நடைபெற்று வந்தது. அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 29-ந்தேதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, தீர்ப்பு செப்டம்பர் 5-ந்தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் கூறி இருந்தனர்.
அதன்படி, நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“முன்ஜாமீனை ஒருவரின் உரிமை என்று கருதி வழங்க முடியாது. தனித்தன்மை கொண்ட பொருளாதார குற்றம் தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கும் போது மிகவும் முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது. ஒரு வழக்கு விசாரணையின் தொடக்க கட்டத்தில் முன்ஜாமீன் வழங்குவது அந்த விசாரணையின் தன்மையை பாதிக்கும். எனவே இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.
மனுதாரர் கீழ்க்கோர்ட்டில் சாதாரண ஜாமீனுக்கான மனு தாக்கல் செய்யலாம் என்றும், அந்த மனுவை அந்த கோர்ட்டு அதன் தகுதியில் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story