வரும் 14 நாட்களும் சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை தொடர்புகொள்ள முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர் சிவன்


வரும் 14 நாட்களும் சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை தொடர்புகொள்ள முயற்சிப்போம்:  இஸ்ரோ தலைவர் சிவன்
x
தினத்தந்தி 7 Sep 2019 4:09 PM GMT (Updated: 7 Sep 2019 4:09 PM GMT)

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கும் இறுதிக்கட்டத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் அதை தொடர்புகொள்ள முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

பெங்களூரு,

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலம் , சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட தூரம் சென்றதும் ராக்கெட்டில் இருந்து பிரிந்த சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்தது. அவ்வப்போது அதன் சுற்றுவட்ட பாதை மாற்றி அமைக்கப்பட்டு கடந்த மாதம் 20-ந் தேதி விண்கலம், நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது.

 அதன்பிறகு கடந்த 2-ந் தேதி 1,471 கிலோ எடை கொண்ட விக்ரம் லேண்டர் ஆர்பிட்டரில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. சாஃப்ட் லேண்டிங் முறையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்க இஸ்ரோ திட்டமிட்டு இருந்த நிலையில்,  நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கி.மீட்டர் தொலைவில், கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விக்ரம் லேண்டர் இழந்தது.  

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சந்திரயான் -2 திட்டத்தில் 90% -95% இலக்குகள் எட்டப்பட்டுவிட்டது. சந்திரயான் -2 திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் சந்திரன் தொடர்பான ஆய்வுகளின் முனைப்பு காட்டுவோம்.

லேண்டரை தரையிறக்கும் இறுதிக்கட்டத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதால் அதை தொடர்புகொள்ள முடியவில்லை.  

சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை வரும் 14 நாட்களும் தொடர்பு கொள்ள முயற்சிப்போம்.  அறிவியலில் முடிவுகளை தேடக்கூடாது. மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச்செல்லும். 

ஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓராண்டும் என்றாலும் கூடுதல் எரிபொருளால் 7.5 ஆண்டுகள் வரை செயல்பட வைக்க முடியும்.

அது துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டு வரும் ஆர்பிட்டார்  7.5 ஆண்டுகள் வேலை செய்யும். ஆர்பிட்டாரின் அதிதுல்லிய கேமரா அனுப்ப உள்ள படங்கள் சர்வதேச அளவிலான ஆய்வுக்கு உதவும்.

2019 ல் ககன்யான் திட்டத்திற்காக முழுமையாக தயாராகி வருகிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு தரும் சக்தியாக உள்ளார்.

விக்ரம் லேண்டரிடம் இருந்து இழந்த சமிக்ஞையை மீண்டும் உயிர்ப்பிக்க தேவையான முயற்சிகள் நடந்து வருகின்றன.

60 ஆண்டில் 109 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதில் 61 திட்டங்கள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.  நிலவு தொடர்பான உலக நாடுகளின் திட்டத்தில் 40% தோல்வியை தழுவி உள்ளதாக அமெரிக்காவின் நாசா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story