18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் - ரஷியா


18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் - ரஷியா
x
தினத்தந்தி 9 Sept 2019 12:55 PM IST (Updated: 9 Sept 2019 12:55 PM IST)
t-max-icont-min-icon

18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ். 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள் இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 

சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதும் கடந்த ஆண்டு அக்டோபரில்,  ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே கையெழுத்தானது.  

இப்போது 18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு எஸ் -400 ரக  ஏவுகணைகளை 2020-க்கு பிறகு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்ததாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனமான தாஸ் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் ரஷியாவின் துணை பிரதமர் யூரி போரிசோ, 18-19 மாதங்களில் எஸ் 400 ரக ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

 “இந்தியாவிடம் இருந்து முன்பணம் பெறப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு திட்டமிட்டப்படி , சுமார் 18-19 மாதங்களுக்குள் அனைத்து ஏவுகணைகளும் வழங்கப்படும்" என்று போரிசோவ் கூறியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தில் இந்தியா முன்நோக்கி நகர்ந்தால், இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியமான தாக்கத்தை அது ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story