இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலியான சமூக ஊடக கணக்குகள்
இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் சமூக ஊடக கணக்குகள் இல்லை என்று இஸ்ரோ அமைப்பு தெரிவித்து உள்ளது.
பெங்களூரு,
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பினார்கள். இதற்கான திட்ட செலவு ரூ.978 கோடி ஆகும். ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை கொண்டதுதான் சந்திரயான்-2 விண்கலம்.
முதலில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலம் பின்னர் அதில் இருந்து விடுபட்டு நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சென்றது. அதன்பிறகு அவ்வப்போது சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலம் படிப்படியாக நிலவை நெருங்கியது.
கடந்த 2ந்தேதி ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றி வந்தது. கடந்த 6ந்தேதி குறைந்தபட்சமாக 35 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 101 கி.மீ. தொலைவிலும் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றி வந்தது.
இதன்பின் கடந்த 7ந்தேதி அதிகாலை 1.54 மணிக்கு லேண்டரை நிலவில் மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். நிலவின் தென் துருவத்தில் சுமார் 1½ கி.மீ. இடைவெளியில் அமைந்துள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையேயான சமதள பரப்பில் தரை இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை பார்ப்பதற்காக அங்கு பிரதமர் மோடி வந்திருந்தார்.
ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு மேலே 2.1 கி.மீ. உயரத்தில் வந்து கொண்டிருந்த போது துரதிருஷ்டவசமாக, லேண்டருடனான தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார்.
எனினும், 5 சதவிகித பணிகள் மட்டுமே இழக்கப்பட்டுள்ளன. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீதமுள்ள 95 சதவீதம், அதாவது சந்திரயான்-2, சந்திரனை வெற்றிகரமாக சுற்றுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் இஸ்ரோ அமைப்பு பெயரில் டுவிட்டர் உள்பட சில சமூக ஊடகங்களில் சந்திரயான்-2 பற்றிய போலியான சமூக ஊடக கணக்குகள் செயல்பட்டு வந்துள்ளன.
இதற்கு மறுப்பு தெரிவித்து இஸ்ரோ அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், கைலாசவடிவு சிவன் என்ற பெயரில் (கே. சிவன் புகைப்படங்களுடன்) சமூக ஊடகங்களில் கணக்குகள் செயல்பட்டு வருகின்றன என எங்களது கவனத்திற்கு தகவல் வந்துள்ளது.
இஸ்ரோ தலைவர் கே. சிவன் எந்தவொரு சமூக ஊடக தளங்களிலும் தனிப்பட்ட முறையில் கணக்குகள் வைத்திருக்கவில்லை. அதனால் அதுபோன்ற அனைத்து கணக்குகளிலும் உள்ள அனைத்து தகவல்களும் நம்பகத்தன்மை அற்றவை என தெரிவித்து உள்ளது.
தொடர்ந்து, இஸ்ரோவின் சமூக ஊடக தளங்களுக்கான அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான முகவரிகளையும் வெளியிட்டு உள்ளது. அவை, https://www.twitter.com/isro and https://www.facebook.com/ISRO, Youtube ISRO Official ஆகிய கணக்குகள் ஆகும் என்று தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story