இந்தியர்களின் கருப்பு பணத்தை கொண்டுவர முயற்சி நடக்கிறது - மத்திய மந்திரி அனுராக் தாகூர் பேட்டி


இந்தியர்களின் கருப்பு பணத்தை கொண்டுவர முயற்சி நடக்கிறது - மத்திய மந்திரி அனுராக் தாகூர் பேட்டி
x
தினத்தந்தி 10 Sept 2019 4:12 AM IST (Updated: 10 Sept 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு கொண்டுவரும் முயற்சிகள் நடக்கிறது என்று மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறினார்.

சிம்லா,

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவருவோம் என பா.ஜனதா தனது முந்தைய தேர்தல் அறிக்கையில் கூறியது. இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசு தங்கள் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை வழங்குவதாக அறிவித்தது. இதில் நடவடிக்கைக்கு பயந்து ஏற்கனவே வங்கி கணக்குகளை ரத்துசெய்தவர்களின் பட்டியல் முதலில் வெளியாகும் என வங்கிகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மோடி அரசின் 100 நாள் சாதனை குறித்து சிம்லாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகார இணை மந்திரி அனுராக் தாகூர் இதுபற்றி கூறியதாவது:-

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டுக்கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு சும்மா உட்கார்ந்து கொண்டு இருக்கவில்லை. இது நீண்ட சட்டரீதியான நடவடிக்கை. இதுதொடர்பாக சில வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் இது சாத்தியமாகும்.

கருப்பு பணத்தை மீட்டுவருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு ஒன்றும் செய்யவில்லை. மோடி அரசு தான் இதுதொடர்பாக நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது.

வருமான வரியை பொறுத்தவரை அனைவரையும் சந்தேகப்படுவதில்லை என்றும், வரி செலுத்தும் அனைவரையும் மதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு நடந்துகொள்கிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை போன்ற வரலாற்று சாதனைகளை மோடி அரசு 100 நாட்களில் எடுத்துள்ளது. இது ஆரம்பம் தான். இன்னும் வருகிற காலங்களில் மேலும் பல வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story