10 வயது சிறுமியின் முதுகில் இருந்து 2 அங்குல நீள ஊசியை நீக்கிய மருத்துவர்கள்


10 வயது சிறுமியின் முதுகில் இருந்து 2 அங்குல நீள ஊசியை நீக்கிய மருத்துவர்கள்
x
தினத்தந்தி 10 Sept 2019 3:47 PM IST (Updated: 10 Sept 2019 3:47 PM IST)
t-max-icont-min-icon

10 வயது சிறுமியின் முதுகில் இருந்து 2 அங்குல நீள ஊசியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் 10 வயது சிறுமி தனது முதுகில் வலி உள்ளது என பெற்றோரிடம் கூறியுள்ளாள்.  ஆனால் அவர்களால் அதற்கான சரியான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள முடியவில்லை.  இதனால் அருகிலுள்ள சாச்சா நேரு பால சிகிச்சை மையத்தில் சிறுமிக்கு எக்ஸ்-ரே பரிசோதனை நடந்தது.  இதில் சிறுமியின் முதுகில் ஊசி இருந்தது கண்டறியப்பட்டது.  சிறுமியின் தாய் படுக்கையில் போட்டு வைத்திருந்த தையல் இயந்திரத்தில் பயன்படும் ஊசியானது சிறுமியின் முதுகிற்குள் சென்றுள்ளது.

இதன்பின்னர் அறுவை சிகிச்சை நடந்தது.  எனினும், அதில் ஊசியை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதனால் சிறுமிக்கு வலி அதிகரித்தது.  இதன்பின்பு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு உள்ளாள்.  இதனை தொடர்ந்து மருத்துவர்கள் ஊசி வேறு எங்கும் சென்று விடாமல் இருப்பதற்காக 2 வாரங்கள் காத்திருந்து உள்ளனர்.

அதுவரை சிறுமியின் முக்கிய உறுப்புகளில் ஊசி பாதிப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை.  இதற்கிடையே, அல்ட்ராசவுண்டு முறையில் ஊசியை கண்காணித்து வந்துள்ளனர்.  ஊசியின் இருப்பிடத்தினை உறுதி செய்து கொண்ட பின்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.

அந்த ஊசி உடலுக்குள் துரு பிடித்து இருந்துள்ளது.  பின்னர் ஊசி கவனமுடன் நீக்கப்பட்டு உள்ளது.  சிகிச்சை முடிந்து ஒரு சில மணிநேரத்தில் சிறுமி மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டு விட்டாள்.  சிறுமி அன்றாட வேலைகளை செய்யும் வகையில் நலமுடன் இருக்கிறாள்.

Next Story