மாறுவேடத்தில் விமானத்தில் செல்ல முயன்ற இளைஞர் சிக்கினார்
அமெரிக்காவிற்கு மாறுவேடத்தில் செல்ல முற்பட்ட இளைஞர் டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் கடந்த 8-ம் தேதி அம்ரிக் சிங் என்பவர் வீல் சேரில் வந்தார். வெள்ளை தாடி, கண்ணாடியுடன் முதியவர் போல் காட்சியளித்த அவர், தன்னால் நடக்க முடியாது என்று கூறி விமான நிலையத்துக்குள் வீல் சேரில் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் விமானத்துக்காக காத்திருந்த அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் ஜெய்ஷ் பட்டேல் (வயது 32) என்பதும், போலி பாஸ்போர்ட்டில் நியூயார்க் செல்ல இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடத்தியபோதுதான், அவர் தலைக்கு வெள்ளை தலைப்பாகையும், ஒட்டுத்தாடியும் வைத்திருந்தது தெரிய வந்தது. அவரது பாஸ்போர்ட்டில் அம்ரிக் சிங், வயது 81 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரை பிடித்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ஷ் பட்டேல் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், எதற்காக அவர் முதியவர் வேடத்தில் நியூயார்க் செல்ல முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story