ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு


ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு
x
தினத்தந்தி 11 Sep 2019 8:12 AM GMT (Updated: 11 Sep 2019 9:25 PM GMT)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், தனது வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இதுதவிர, தன்னை நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும், சி.பி.ஐ. கைது மற்றும் விசாரணைக்கு எதிராகவும், ஒட்டுமொத்த வழக்குக்கு எதிராகவும் ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள சி.பி.ஐ தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய தடை விதிக்க கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை கடந்த 5-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story